சுதந்திர தினம் - குடியரசு தினம்; கொடி ஏற்றுவதில் இத்தனை வித்தியாசங்களை கவனிச்சிங்களா?
சுதந்திர தினம் மற்றும் குடியரசு தினத்தன்று கொடியேற்றுவதில் உள்ள வித்தியாசங்களைக் காண்போம்.
சுதந்திர தின விழா
இந்தியாவின் 78வது சுதந்திர தின விழா இன்று நாடு முழுவதும் கொண்டாடப்படுகிறது. இதனை முன்னிட்டு பிரதமர் மோடி டெல்லி செங்கோட்டையில் தேசியக் கொடி ஏற்றி உரை நிகழ்த்தினார். தமிழக முதல்வர் ஸ்டாலின் தலைமை செயலகத்தில் கொடி ஏற்றி சுதந்திர தின உரை ஆற்றினார்.
இன்னும் பலருக்கு சுதந்திர தினம் மற்றும் குடியரசு தினத்திற்கு இடையே உள்ள வேறுபாடு தெரியவில்லை. 1947 ஆம் ஆண்டு ஆகஸ்ட் 15 ம் நாள், ஆங்கிலேய ஆட்சியிலிருந்து நாடு விடுதலை பெற்று பிரிட்டிஷ் ஆட்சியாளர்களிடம் இருந்து இந்தியர்களுக்கு ஆட்சி மாற்றம் நிகழ்ந்தது. இந்த நாள் சுதந்திர தினமாக கொண்டாடப்பட்டு வருகிறது. +
சுதந்திர தினம் - குடியரசு தினம்
நாடு சுதந்திரம் அடைந்த பிறகும், ஆங்கிலேயர்கள் நம்மை ஆள்வதற்காக வரையறுக்கப்பட்ட சட்ட திட்டங்களைத்தான் பயன்படுத்தி வந்தோம். அதன் பின், இந்திய அரசியலமைப்பு சட்டம் இயற்றப்பட்டு, 1950 ஜனவரி 26 ஆம் நாள் அதிகாரப்பூர்வமாக நடைமுறைக்கு வந்தது. இந்த ஜனவரி 26 ம் நாளை குடியரசு தினமாகக் கொண்டாடி வருகிறோம்.
இந்த இரு நாட்களும் நாடு முழுவதும் கொண்டாடப்பட்டாலும் இந்த கொண்டாட்டங்களில் பல்வேறு வித்தியாசங்கள் உண்டு. முதல் சுதந்திர தினத்தன்று குடியரசு தலைவர் பதவி இந்தியாவில் இல்லை. குடியரசுத் தலைவர் பதவிக்கு நிகரான கவர்னர் ஜெனரல் பதவி இருந்தது. லார்ட் மவுண்ட்பேட்டன் இந்தியாவின் கவர்னர் ஜெனரலாக இருந்தார். ஆனால் சுதந்திரம் அடைவதற்கு முன்பாகவே தேர்தல் நடத்தி இடைக்கால இந்திய அரசை அமைக்கப்பட்டு பிரதமர் பதவியில் ஜவஹர்லால் நேரு இருந்தார். அதனால் சுதந்திர தினத்தின் முக்கிய பிரதிநிதியாக அன்று முதல் இன்று வரை பிரதமர் இருந்து வருகிறார்.
கொடி ஏற்றம் - கொடி அவிழ்ப்பு
இந்திய அரசியலமைப்பு சட்டம் ஏற்கப்பட்டு, இந்திய குடியரசு நாடு என்று அறிவிக்கும் தினத்தன்று நாட்டின் முதல் குடிமகனாக, அரசியலமைப்புத் தலைவராக குடியரசுத் தலைவர் தேர்ந்தெடுக்கப்பட்டார். 1950 ஆம் ஆண்டு ஜனவரி 26 ஆம் நாள் ராஜேந்திர பிரசாத் இந்திய குடியரசு தலைவராக பொறுப்பேற்றார். அதனால் குடியரசு தினத்தின் முக்கிய நபராக குடியரசுத் தலைவர் இருப்பார்.
பெரும்பாலான மக்கள் இரு நாட்களும் கொடி ஏற்றப்படுவதாக நினைப்பார்கள். ஆனால் அது தவறு. சுதந்திர தினத்தன்று இந்தியாவின் தேசியக்கொடி ஏற்றப்படும். ஆனால் குடியரசு தினத்தன்று தேசியக்கொடி அவிழ்க்கப்படும்.
சுதந்திர தினத்தன்று காலணி ஆதிக்கத்திலிருந்து இந்தியா முழு சுதந்திரம் பெற்றதை நினைவு கூறும் வகையில் தேசியக்கொடி கீழிருந்து பறந்தவாறு மேலேற்றப்படும். ஆனால் குடியரசு தினத்தன்று கொடிக்கம்பத்தின் மேல் கொடி மூடப்பட்டு கட்டப்பட்டிருக்கும். அதனை அவிழ்க்கும் போது கொடி பறக்கும். இந்திய அரசியலமைப்பு சட்டத்தின்படி இறையாண்மை மற்றும் ஜனநாயக குடியரசு நாடாக செயல்படுவோம் என்பதை தெரிவிக்கும் பொருட்டு கொடி அவிழ்க்கப்படும்.
செங்கோட்டை - ராஜ்பாத்
சுதந்திர தினத்தன்று பிரதமர் செங்கோட்டையில் இருந்து மூவர்ணக் கொடியை ஏற்றுவார். அதைத் தொடர்ந்து அவர் நாட்டு மக்களுக்கு உரையாற்றுவார். குடியரசு தினத்தன்று குடியரசு தலைவர் ராஜ்பாத்தில் கொடியை அவிழ்ப்பார். அதைத் தொடர்ந்து இராணுவ வலிமை மற்றும் கலாச்சார பன்முகத்தன்மையின் பாரிய நிகழ்ச்சி நாட்டின் வளத்தை உலகிற்குக் கட்டுவதற்காக நடைபெறும்.
மாநிலங்களைப் பொறுத்த வரையில் சுதந்திர தினத்தன்று முதலமைச்சரும் குடியரசு தினத்தன்று கவர்னரும் கொடியேற்றுவார்கள். இந்த நடைமுறை 1974ஆம் ஆண்டில் இருந்து நடைமுறைக்கு வந்தது.