2047 க்குள் வளர்ந்த பாரதம் - பிரதமர் மோடி சுதந்திர தின உரை
78-வது சுதந்திர தினதத்தை முன்னிட்டு தேசிய கொடி ஏற்றி பிரதமர் மோடி உரையாற்றியுள்ளார்.
சுதந்திர தினம்
இந்தியாவின் 78-வது சுதந்திர தினம் இன்று நாடு முழுவதும் கோலாகலமாக கொண்டாடப்படுகிறது. இதை முன்னிட்டு பிரதமர் நரேந்திர மோடி, டெல்லியில் உள்ள காந்தி நினைவிடத்தில் மரியாதை செலுத்தினார்.
அதன் பின் டெல்லி செங்கோட்டைக்கு சென்ற அவருக்கு முப்படைகளின் அணிவகுப்பு மரியாதை அளிக்கப்பட்டது. அதை ஏற்றுக் கொண்ட பிரதமர் மோடி டெல்லி - செங்கோட்டையில் தேசியக் கொடியை ஏற்றி வைத்தார். 11-வது முறையாக பிரதமர் மோடி செங்கோட்டையில் தேசியக் கொடியை ஏற்றி வைத்துள்ளார்.
மோடி உரை
அதன் பின்னர் ஹெலிகாப்டர் மூலம் தேசியக் கொடிக்கு மலர் தூவப்பட்டது. இதன் பின்னர் நாட்டு மக்களுக்கு சுதந்திர தின உரையாற்றினார். அந்த உரையில், "இந்தியாவை பாதுகாக்க, வளர்ச்சிப் பாதையில் கொண்டுசெல்வதற்காகப் பலர் உழைத்து வருகின்றனர். ஆங்கிலேயர்களை எதிர்த்து 40 கோடி இந்தியர்கள் போராடினர். தற்போது 140 கோடி மக்கள் உள்ள நிலையில் இந்தியாவின் வலிமை வளர்ச்சி அடைந்துள்ளது.
நாட்டுக்காக தங்களின் இன்னுயிரைத் தியாகம் செய்த கதாநாயகர்களுக்கு வீர வணக்கம் செலுத்துகிறேன். இந்திய நாட்டு விடுதலைக்காக தியாகம் செய்தவர்களுக்கு நாம் கடன்பட்டுள்ளோம். கடந்த சில ஆண்டுகளாக பல மோசமான பேரிடர்களை எதிர்கொண்டு வந்தாலும், அதில் இருந்து மீண்டு வருகிறோம்.
வளர்ந்த பாரதம்
வயநாடு நிலச்சரிவால் பாதிக்கப்பட்ட மக்களுக்குத் துணை நிற்போம். பேரிடர் காலங்களில் உறவுகளை இழந்தவர்களுக்கு இந்த தேசம் துணை நிற்கும். இந்தியா வல்லரசு நாடாக வேண்டும் என்றால் உள்நாட்டு உற்பத்தியில் சிறந்து விளங்க வேண்டும். உலகளவில் 3வது பெரிய பொருளாதாரம் கொண்ட நாடு என்ற புகழை இந்தியா விரைவில் அடையும்.
இந்திய நீதித்துறையில் நாட்டு மக்கள் மாற்றத்தை எதிர்பார்க்கின்றனர். நீதித்துறைக்கு வலிமை சேர்க்க மாற்றங்களை கொண்டுவர வேண்டும். சிறப்பான சீர் திருத்தங்களை மேற்கொள்வதற்காக புதிய திட்டங்கள் கொண்டுவரப்பட உள்ளன. வங்கித்துறையில் மேற்கொள்ளப்பட்டுள்ள சீர்திருத்தங்களால் மக்கள் பயனடைந்துள்ளனர். இதனால் வங்கித்துறை மேலும் வலிமை அடைந்துள்ளது. ஒரே திசையில் ஒன்றாகச் சென்றால், 2047-க்குள் ‘வளர்ந்த பாரதம்’ என்ற குறிக்கோளை அடையலாம் என பேசியுள்ளார்.