ரயில்வே சுரங்கப் பாதையில் மிதந்த சடலம் - 2 மணி நேரம் பெய்த கனமழையால் நேர்ந்த கொடூரம்!
ரயில்வே சுரங்கப் பாதையில் தேங்கியிருந்த மழைநீரில் மூழ்கி ஒருவர் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
காரைக்குடி
தெற்கு வங்கக் கடல் பகுதிகளின் மேல் வளிமண்டல கீழடிக்குச் சுழற்சி காரணமாகத் தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களில் கனமழை பெய்து வருகிறது. அந்த வகையில் நேற்று சிவகங்கை மாவட்டம், காரைக்குடி, தேவகோட்டை உள்ளிட்ட பகுதிகளில் மிகக் கனமழை பெய்தது.
சுமார் இரண்டு மணி நேரத்துக்கும் மேலாகப் பெய்த கனமழையால் காரைக்குடி மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் சாலைகளில் மழை நீர் பெருக்கெடுத்து ஓடியது .
காரைக்குடியில் அதிகபட்சமாக 154 மில்லி மீட்டர் மழைப் பதிவாகி உள்ளது. இதனால் பல்வேறு பகுதிகளில் நிறுத்திவைத்திருந்த இருசக்கர வாகனங்கள் நீரில் மூழ்கினர். சாலை முழுவதும் இடுப்பளவு தண்ணீர் தேங்கியது.
உயிரிழந்த சம்பவம்
இந்நிலையில், காரைக்குடியில் கனமழை காரணமாக ரயில்வே சுரங்கப்பாதையில் மழைநீர் தேங்கி உள்ளது. இதில் ஒருவர் மூழ்கிப் பலியாகியுள்ளார். இந்த சம்பவம் குறித்து வழக்குப் பதிவு செய்த காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டனர்.
காரைக்குடி ரயில்வே சுரங்கப்பாதையில் வெள்ளத்தில் மூழ்கிப் பலியானவர் அப்பகுதியைச் சேர்ந்த பெயிண்டரான பீட்டர் என்பது தெரியவந்துள்ளது.
அவரது உடலை மீட்ட காவல்துறை பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.