விவசாய நிலத்தில் கிடைத்த வைரக்கல், லட்சாதிபதியான பெண் - வயலே கதியென கிடக்கும் கிராமம்!
ஆந்திராவில் பெண் ஒருவருக்கு விவசாய நிலத்தில் இருந்து வைரக்கல் கிடைத்ததால் லட்சாதிபதியான சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
வயலில் வைரம்
ஆந்திர மாநிலம், துக்கிலி மண்டலம் ஜென்னகிரி விவசாய நிலத்தில், ஓங்கோலை சேர்ந்த பெண் ஒருவர் களை எடுக்கும் பணியில் ஈடுபட்டார். அப்பொழுது அவர் தேன் நிறத்தில் கிடந்த கல் ஒன்றை எடுத்து அங்குள்ள நகை கடையில் பரிசோதித்து பார்த்தார்.
அப்பொழுது அது வைரக்கல் என்று தெரியவந்தது. பின்னர், அந்த நகை கடை வியாபாரி அதனை ரூ.25 லட்சத்திற்கு வாங்கினார். இந்த தகவல் அந்த ஊர் முழுவதும் பரவியது, அதனால் ஆண்களும், பெண்களும் போட்டி போட்டுகொண்டு வயல்வெளிகளில் வைரத்தை தேடி வருகின்றனர்.
வெறிச்சோடிய கிராமம்
இந்நிலையில், பக்கத்து ஊரான மத நாதபுரத்தை சேர்ந்த விவசாயி தனது குடும்பத்தினருடன் அவரது வயல்வெளியில் வைரத்தை தேடினார். அவருக்கு 2 வைரக்கல் கிடைத்தது, தொடர்ந்து பொதுமக்கள் வைரத்தை தேடும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.
ஊர் மக்கள் அனைவரும் போட்டி போட்டு வயலில் வைரத்தை தேடியதால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. ஊர் மக்கள் அனைவரும் வயல்வெளியில் வைரத்தை தேடியதால் கிராமத்தில் ஆட்கள் நடமாட்டம் இன்றி வெறிச்சோடி காணப்பட்டது. இந்த தகவல் அடுத்தடுத்த கிராமங்களுக்கும் பரவி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.