100க்கும் மேற்பட்ட பெண்கள் புதைப்பு; வன்கொடுமை, ஆசிட் தழும்பு - 13 இடங்களில் தோண்டும் பணி!
தர்மஸ்தலா கோயில் விவகாரத்தில் 13 இடங்களில் தோண்டும் பணி தொடங்கியது.
தர்மஸ்தலா விவகாரம்
கர்நாடகா, தட்சின கன்னடாவில் தர்மஸ்தலா உள்ளது. இங்குள்ள மஞ்சுநாதர் கோயில் மிகவும் பிரபலம். இந்நிலையில் இக்கோயிலின் முன்னாள் தூய்மைப் பணியாளர் பரபரப்பு புகார் மனு ஒன்றைச் சமர்ப்பித்திருந்தார்.
அதில், "1995-ம் ஆண்டிலிருந்து 2014-ம் ஆண்டு வரை, பல பெண்கள் மற்றும் மாணவிகளின் உடல்களை அடக்கம் செய்யச் சொல்லி என்னை கோயில் நிர்வாகத்தினர் கட்டாயப்படுத்தினார்கள். இதை நான் செய்யவில்லை என்றால் என்னைக் கொன்றுவிடுவதாக மிரட்டினார்கள்.
தீவிர நடவடிக்கை
பல பெண்களை பள்ளி சீருடையிலேயே புதைத்து இருக்கிறேன். பெண்களின் உடலில் பாலியல் வன்முறைக்கான காயங்களும், சில நேரம் ஆசிட் தழும்புகளும் காணப்படும்" என்று குறிப்பிடப்பட்டிருந்தது. தொடர்ந்து பெல்தங்கடி நீதிமன்றத்தில் ஆஜராகி வாக்குமூலம் அளித்தார்.
அப்போது, சில எலும்புகளையும் கொண்டு வந்திருந்தார். இதனையடுத்து, இந்தச் சம்பவம் குறித்து விசாரிக்க சிறப்புப் புலனாய்வுக் குழு அமைக்கப்பட்டுள்ளது. தற்போது தர்மஸ்தலா குளத்தை தவிர்த்து, நேத்ராவதி ஆற்றுக்கு அருகிலுள்ள ஒரு வனத்தில் 13 இடங்களில் குறி வைத்து
உடல்களை தோண்டி எடுக்கும் பணி தொடங்கப்பட்டுள்ளது. முதல் நாளில் எவ்வித உடலும் கண்டெடுக்கப்படவில்லை. தோண்டும் பணி முழுவதும் வீடியோவாக பதிவு செய்யப்படுகிறது.