தனுஷ் ஐஸ்வரியாவிடம் மூடிய அறையில் விசாரணை - இருவரும் நீதிபதியிடம் சொன்னது என்ன?
தனுஷ், ஐஸ்வரியா விவாகரத்து வழக்கிற்காக நீதிமன்றத்தில் ஆஜராகியுள்ளனர்.
தனுஷ் ஐஸ்வர்யா
நடிகர் ரஜினிகாந்தின் மூத்த மகள் ஐஸ்வர்யாவிற்கும், இயக்குநர் கஸ்தூரிராஜாவின் இளைய மகன் நடிகர் தனுஷுக்கும் கடந்த 2004 ஆம் ஆண்டு நவம்பர் 18 ஆம் தேதி சென்னையில் திருமணம் நடந்தது.
இந்த தம்பதிகளுக்கு யாத்ரா லிங்கா என 2 மகன்கள் உள்ளனர். கருத்து வேறுபாட்டால் தங்களது 18 ஆண்டு கால திருமண வாழ்க்கை முடிவுக்கு வருவதாக கடந்த 2022 ஆம் ஆண்டு இருவரும் அறிவித்தனர்.
விவாகரத்து வழக்கு
இந்நிலையில் சட்டரீதியாக விவாகரத்து கோரி சென்னை குடும்ப நல நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தனர். இந்த மனு முதன்மை குடும்ப நல நீதிமன்ற நீதிபதி சுபாதேவி முன்பு இன்று விசாரணைக்கு வந்தது. காலை 10.30 மணிக்கு ஐஸ்வர்யா ரஜினிகாந்த் தனது வழக்கறிஞருடன் நீதிமன்றத்தில் ஆஜரானார்.
தனுஷ் ஷூட்டிங்கில் இருந்து வந்து கொண்டிருப்பதால் அவர் ஆஜராக சிறிது நேர அவகாசம் கோரப்பட்ட நிலையில் விசாரணை 12 மணிக்கு ஒத்திவைக்கப்பட்டது.11:45 மணியளவில் நடிகர் தனுஷ் ஆஜரானார்.
தீர்ப்பு ஒத்திவைப்பு
விசாரணையை பார்வையிட யாருக்கும் அனுமதி இல்லை என்ற காரணத்தால் கோர்ட் அறையின் கதவுகள் மூடப்பட்டன. எதற்காக பிரிகிறீர்கள், ஏன் சிறிது கால அவகாசத்திற்கு பிறகு சேர்ந்து வாழக் கூடாது என்பது போன்ற கேள்விகள் கேட்கப்பட்டது.
இருவருமே பிரிவதில் உறுதியாக இருப்பதாக நீதிபதியிடம் தெரிவித்ததாக கூறப்படுகிறது. இதனையடுத்து தீர்ப்பு தேதியை வரும் 27 ஆம் தேதிக்கு ஒத்திவைத்து நீதிபதி சுபாதேவி உத்தரவிட்டார்.