உண்டியலில் விழுந்த iPhone முருகனுக்கே சொந்தம் - கோவிலில் நடந்த சுவாரசிய நிகழ்வு
கோவில் உண்டியலில் தவறுதலாக ஐபோனை போட்டவர் போனை திருப்பி தருமாறு மனு அளித்துள்ளார்.
திருப்போரூர் முருகன் கோவில்
சென்னை புறநகரில் அமைந்துள்ளது திருப்போரூர் முருகன் கோவில். மிகவும் பிரசித்தி பெற்ற கோவில் என்பதால் ஏராளமான பக்தர்கள் சாமி தரிசனம் மேற்கொள்ள வருவது வழக்கம்.
இந்நிலையில் கடந்த அக்டோபர் மாதம் 18ஆம் தேதி சென்னை சிஎம்டிஏ அலுவலகத்தில் பணியாற்றி வரும் தினேஷ் என்பவர் தனது குடும்பத்துடன் சுவாமி தரிசனம் செய்ய வந்திருக்கிறார்.
ஐபோன்
செய்த பிறகு உண்டியலில் பணம் போட முயன்ற போது அவரது 1 லட்ச ரூபாய் மதிப்புள்ள ஐபோன் உண்டியலில் விழுந்துள்ளது. அதிர்ச்சி அடைந்த அவர் இது தொடர்பாக கோவில் நிர்வாகத்தினர் மற்றும் இந்து சமய அறநிலையத்துறை அதிகாரிகளிடம் புகார் அளித்திருக்கிறார்.
கோவில் உண்டியல் திறக்கும் போது வருமாறு அறிவுறுத்தியுள்ளனர். இந்நிலையில் நேற்று(21.12.2024) காணிக்கை பணத்தை எண்ணுவதற்காக இந்து சமய அறநிலைத்துறை இணை ஆணையர் ராஜலட்சுமி, செயல் அலுவலர் குமரவேல் ஆய்வாளர் பாஸ்கரன் முன்னிலையில் கோவில் உண்டியல் திறக்கப்பட்ட போது தினேஷ் குமாருக்கு தகவல் அளித்தனர்.
முருகருகே சொந்தம்
இதில் 52 லட்சம் ரூபாயு் ரொக்கமும், 289 கிராம் தங்கமும், 6920 கிராம் வெள்ளியும் உண்டியலில் பக்தர்கள் காணிக்கையாக செலுத்தியிருந்தனர். செல்போனை பெற்றுக்கொள்ளலாம் என நினைத்து கோவிலுக்கு வந்த தினேஷ் குமாரிடம் உண்டியலில் விழுந்த அனைத்தும் முருகருகே சொந்தம் என கூறி அவரது போனை தர மறுத்துள்ளனர். வேண்டுமானால் போனில் உள்ள தரவுகளை மாற்றிக்கொள்ளுங்கள் என தெரிவித்துள்ளார்.
இதனால் ஏமாற்றமடைந்த அவர், தனது செல்போனை திருப்பி அளிக்குமாறு இந்து சமய அறநிலைத்துறையிடம் மனு அளித்துள்ளார். செல்போனை திருப்பி தருவது குறித்து உரிய விசாரணை நடத்தி முடிவெடுக்கப்படும் என தெரிவித்துள்ளனர்.