525 கோடி மோசடி புகார் - பாஜக வேட்பாளர் தேவநாதன் கைது
நிதி மோசடி புகாரில் பாஜக வேட்பாளர் தேவநாதன் கைது செய்யப்பட்டுள்ளார்.
தேவநாதன்
இந்திய மக்கள் கல்வி முன்னேற்ற கழகம் என்ற கட்சியை நடத்தி வருபவர் தேவநாதன். இவர் நடந்து முடிந்த மக்களவை தேர்தலில் சிவகங்கை தொகுதியில் பாஜக சார்பில் வேட்பாளராக போட்டியிட்டு 1,95,788 வாக்குகள் பெற்று 3 வது இடம் பிடித்தார்.
சென்னையில் உள்ள தி மயிலாப்பூர் இந்து சாசுவத நிதி நிறுவனத்தின் தலைவராக தேவநாதன் இருந்து வருகிறார். 1872 ஆம் ஆண்டு முதல் இந்த நிதி நிறுவனம் செயல்பட்டு வருகின்றது. மத்திய மற்றும் மாநில அரசு ஊழியர்கள் மற்றும் ஓய்வு பெற்ற முதியவர்கள் தங்களது ஓய்வூதிய பணத்தை அதிக அளவில் இந்த நிறுவனத்தில் முதலீடு செய்து உள்ளனர்.
கைது
இந்த நிறுவனத்தில் 10 முதல் 15 சதவீதம் வரை வட்டி தருவதாக கூறி பல்வேறு நபர்களிடம் இருந்து நிதியை பெற்று சுமார் 50 கோடி வரை நிதி மோசடி நடைபெற்றதாக புகார் எழுந்தது. 525 கோடி ரூபாய் வரையிலான வைப்பு தொகையை திரும்ப தர நிதி நிறுவனம் மறுப்பதாக முதலீட்டாளர்கள் குற்றம்சாட்டினர்.
இது தொடர்பாக கடந்த ஜூன் 6ஆம் தேதி 50க்கும் மேற்பட்டோர் அந்த நிறுவனத்திற்கு முன்பாக உள்ள சாலையில் அமர்ந்து போராட்டம் நடத்தினர். இதனையடுத்து 100 க்கும் மேற்பட்டோர் புகார் அளித்தனர்.
இந்த புகாரின் அடிப்படையில் வழக்குப்பதிவு செய்த பொருளாதார குற்றப்பிரிவு காவல்துறையினர், திருச்சியில் வைத்து தேவநாதனை கைது செய்தனர்.