மகளிர் உரிமைத்தொகை பெறமுடியாத பெண்கள் - துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் முக்கிய அறிவிப்பு
மகளிர் உரிமைத்தொகை குறித்த தகவலை உதயநிதி ஸ்டாலின் வெளியிட்டுள்ளார்.
மகளிர் உரிமைத்தொகை
தமிழகத்தில் குடும்பத்தலைவிகளுக்கு ரூ.1000 வழங்கும் மகளிர் உரிமைத்தொகை திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இத்திட்டத்தின் மூலம் சுமார் 1 கோடியே 16 லட்சத்து 50 ஆயிரம் பெண்கள் பயன்பெற்று வருகிறார்கள்.
இதற்கிடையில் மகளிர் உரிமைத்தொகையை ரேஷன் கார்டு உள்ள அனைத்து குடும்பத்தலைவிகளுக்கும் வழங்கவேண்டும் என எதிர்கட்சிகள் தொடர்ந்து கூறி வருகிறார்கள். இந்நிலையில், கார்த்திகை தீபத் திருவிழா ஆலோசனை கூட்டம், நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா உள்ளிட்ட பல்வேறு நிகழ்ச்சிகளுக்காக துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் திருவண்ணாமலைக்கு வந்தார்.
உதயநிதி அப்டேட்
தொடர்ந்து, கிரிவலப் பாதையில் ஆன்மீக பக்தர்களின் வசதிக்காக அமைக்கப்பட உள்ள சுகாதார வளாகம், கழிப்பிட வசதி கட்டடங்கள், சுத்திகரிப்பு குடிநீர் வளாகம் ஆகியவற்றில் ஆய்வு மேற்கொண்டார். மேலும், கிரிவலப் பாதையில் நெடுஞ்சாலை துறை சார்பில் மரக்கன்றுகளை நட்டார்.
இதனையடுத்து அங்கிருந்த பெண்களிடம் பேசுகையில், அங்குள்ள பலருக்கும் மகளிர் உரிமைத்தொகை தங்களுக்கு வழங்கப்படுவதில்லை என கூறினர். இதற்கு அவர், “அனைத்து பெண்களுக்கும் உரிமைத்தொகை கிடைக்க வழிவகை செய்யப்பட்டு வருகிறது. விரைவில் அனைத்து பெண்களுக்கும் கலைஞர் உரிமைத்தொகை கிடைக்கும்” என பதிலளித்தார்.
குடும்பதலைவிகளுக்கு உரிமைத்தொகை கொடுக்க, தமிழக அரசு இந்த ஆண்டு நிதிநிலை அறிக்கையில், ரூ.13,722 கோடி ஒதுக்கீடு செய்துள்ளது குறிப்பிடத்தக்கது.