மீண்டும் தமிழ்த்தாய் வாழ்த்து சர்ச்சை.. நிகழ்ச்சியில் நடந்தது இதுதான் - துணை முதல்வர் விளக்கம்!
மீண்டும் தமிழ்த்தாய் வாழ்த்து தவறாக பாடப்பட்டதா?என்பதற்கு உதயநிதி ஸ்டாலின் விளக்கமளித்துள்ளார்.
தமிழ்த்தாய் வாழ்த்து
முன்னதாக தமிழ்நாட்டின் ஆளுநர் ஆர்.என்.ரவி கலந்து கொண்ட ஒரு நிகழ்வில் தமிழ்த் தாய் வாழ்த்துப்பாடல் பாடப்படும் போது 'திராவிட நல் திருநாடும்' எனும் வரிகள் இல்லாமல் பாடப்பட்டது. இந்த விவகாரம் சர்ச்சையாக வெடித்த நிலையில், ஆளுநர் தரப்பில் விளக்கமளிக்கப்பட்டது.
இந்த நிலையில், இன்று தலைமைச் செயலகத்தில், தமிழ்நாட்டின் துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் கலந்துகொண்ட 'திட்டங்கள் வளர்ச்சித் துறையின் ஆலோசனைக் கூட்டம் மற்றும் ஆய்வுக் கூட்டம்' நடைபெற்றது. அப்போது தமிழ்த்தாய் வாழ்த்து இசைக்கப்பட்டது.
அந்த சமயத்தில் தமிழ்த்தாய் வாழ்த்தின் சில வரிகள் முழுமை பெறாமல் சிறு தடங்கல்கள் ஏற்பட்டது. உடனடியாக மீண்டும் தமிழ்த்தாய் வாழ்த்து பாடல் ஒலிக்கப்பட்டு நிகழ்ச்சி தொடங்கியது. ஆகையில் இந்த விவகாரம் மீண்டும் பேசுப்பொருளாக மாறியது.
அதைத் தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த அவர், ``தமிழ்நாடு முதலமைச்சரின் புத்தாய்வு திட்டத்தில் பயிற்சி பெற்ற 19 நபர்களுக்கு நிறைவுச் சான்றிதழ் வழங்கப்பட்டது. இந்த திட்டம் அடுத்த இரண்டு ஆண்டுகளுக்கு செயல்படுத்தப்படும் என முதல்வர் ஸ்டாலின் தெரிவித்திருக்கிறார்.
துணை முதல்வர்
இந்த திட்டத்தில் அடுத்துப் பயன்பெறப்போகும் இளைஞர்களை தேர்வு செய்யும் பணி நடந்து வருகிறது. எல்லோருக்கும் எல்லாம் என்ற அடிப்படையில் திராவிட மாடல் அரசு செயல்பட்டு வருகிறது.
அரசு நிகழ்வில் தமிழ்த்தாய் வாழ்த்துப் பாடல் தவறாகவெல்லாம் பாடப்படவில்லை. பாடல் பாடப்படும் போது மைக் சரியாக வேலை செய்யவில்லை. இரண்டு, மூன்று இடங்களில் பாடப்படுபவரின் குரல் கேட்கவில்லை.
அதனால் மீண்டும் தமிழ்த்தாய் வாழ்த்துப் பாடலை முழுமையாக கேட்கும்படி பாடப்பட்டது. அதைத் தொடர்ந்து தேசிய கீதமும் முறையாகப் பாடப்பட்டது. இதை ஒரு பிரச்னையாக மாற்றவேண்டாம். என்று தெரிவித்தார்.