எங்களைத் தவிக்க விட்டுட்டு, எங்கே போனீங்க செல்வம் மாமா -உதயநிதி உருக்கம்!
எழுத்தாளரும், முரசொலி நாளிதழின் நிர்வாக ஆசிரியருமான முரசொலி செல்வம் மறைவுக்கு துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் உருக்கமான அறிக்கை வெளியிட்டு இரங்கல் தெரிவித்துள்ளார்.
முரசொலி செல்வம்
இதுகுறித்து உதயநிதி வெளியிட்டுள்ள இரங்கல் அறிக்கையில் திராவிட இயக்கத்தின் மூத்த முன்னோடி, நம் ‘முரசொலி' செல்வம் மாமா மறைந்தார் என்ற செய்தி காலையிலேயே இடியாக இறங்கியது. இன்னமும் அந்த அதிர்ச்சியிலிருந்து மீள முடியாமல் தவிக்கின்றேன்.
வழக்கம் போல, முரசொலியில் கட்டுரை எழுதுவதற்காக குறிப்புகளைச் சேகரித்து வைத்துவிட்டு, உறங்கச் சென்றவரை இயற்கை எடுத்துக் கொண்டிருக்கிறது. கலைஞர் அவர்களின் கொள்கை வார்ப்பு. முதலமைச்சர் அவர்களுடைய வழிகாட்டி. செல்வி அத்தையின் பாசத்துக்குரிய கணவர். எங்களுக்கெல்லாம் கொள்கை உணர்வூட்டிய பண்பாளர்.
'முரசொலி' செல்வம் மாமாவின் மரணம், கலைஞர் குடும்பத்துக்கு மட்டுமல்ல, திராவிட முன்னேற்றக் கழகத்துக்கே பேரிழப்பு. இந்த ஆற்ற முடியாத துயரில், தவிக்கும் கோடிக்கணக்கானத் தொண்டர்களில் ஒருவனாக உறைந்து நிற்கிறேன்.
இயக்கப் பணி - பத்திரிகைப் பணி - திரைத்துறை எனப் பல்வேறு தளங்களில் முத்திரை பதித்த செல்வம் மாமாவின் உழைப்பை சிறு வயதிலிருந்தே நேரில் பார்த்தவன். அவருடன் நெருங்கிப் பழகியவன். கலைஞர் அவர்களைப் போலவே நேர் வகிடு எடுத்துக்கொண்டு,
கலைஞரைப் போலவே கையில் முரசொலியோடு வீட்டிற்கு வருகின்ற செல்வம் மாமாவைப் பார்க்கும் போது, கலைஞரையே பார்ப்பது போன்றதோர் உணர்வு எங்களுக்கு ஏற்படும். அப்படிப்பட்ட செல்வம் மாமா, 'இனி, வர மாட்டார்' என்று நினைக்கும்போதே நெஞ்சம் கலங்குகிறது. “எங்களைத் தவிக்க விட்டுட்டு, எங்கே போனீங்க...
உதயநிதி உருக்கம்
கலைஞர் அவர்களின் மூத்தப் பிள்ளையான முரசொலியுடனே வளர்ந்தவர் - முரசொலியை வளர்த்தவர். கலைஞருக்கு முரசொலி மாறன் மாமா மனசாட்சி என்றால், நம் தலைவர் அவர்களுக்குத் தோளோடு தோள் நின்ற கொள்கை வீரர் செல்வம் மாமா. கழகப் பொதுச்செயலாளர் துரைமுருகன் மாமாவின் நெருங்கிய நண்பரான முரசொலி செல்வம் மாமா,
கழகப் பொதுச் செயலாளரிடம் எப்படி உரிமையோடு பழகுவாரோ, அதே உரிமையோடுதான் கடைக்கோடித் தொண்டனிடமும் பழகும் பண்பைப் பெற்றிருந்தார். சிறியவர் - பெரியவர் வித்தியாசமின்றி எல்லோரிடமும் மரியாதையுடன் பேசுகிற வழக்கத்தைக் கொண்டவர் அவர். 75 ஆண்டுகளைக் கடந்து விட்ட முரசொலியின் நீண்ட நெடியப் பயணத்தில்,
செல்வம் மாமா பதித்தத் தடங்கள் ஏராளம். 'முரசொலி'யில் வந்த செய்திக்காக சட்டமன்றக் கூண்டிலேறி நெஞ்சுரத்துடன் பதில் சொன்ன அவருடைய உறுதிதான் இன்றைக்கு எங்களை எல்லாம் வழி நடத்துகிறது. 'முரசொலி நினைவலைகள்' என்று அவர் எழுதிய அனுபவங்கள் அத்தனையும் திராவிட இயக்க இளைஞர்களுக்கு வழிகாட்டும் பாடங்கள்.
'சிலந்தி' என்ற புனைப்பெயரில் முரசொலியில் அவர் எழுதிய கட்டுரைகள் சிரிக்கவும் - சிந்திக்கவும் - சிலிர்க்கவும் வைக்கும். என் மீது தனிப்பட்ட முறையில் அக்கறை கொண்டிருந்த செல்வம் மாமா, என் வாழ்வின் ஒவ்வொரு கட்டத்திலும் உடன் நின்று ஆலோசனைகளை வழங்கியவர்.
இன்றைய முரசொலியில் கூட, என்னைப்பற்றி ஒரு பத்தியை எழுதியிருக்கிறார் என்று எண்ணும் போது அவரது இழப்பைக் கற்பனை கூட செய்து பார்க்க முடியவில்லை என்று தெரிவித்துள்ளார்.