இனி பழைய வாகனங்களுக்கு பெட்ரோல் கிடையாது - அரசு அதிரடி அறிவிப்பு
இனி 15 வருட பழைய வாகனங்களுக்கு பெட்ரோல் கிடையாது என மாநில அரசு தெரிவித்துள்ளது.
பழைய வாகனங்கள்
அதிகரிக்கும் வாகன பயன்பாடு காரணமாக காற்று மாசுபாடு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. குறிப்பாக டெல்லியில் பள்ளிகளை தற்காலிகமாக மூடிவிட்டு ஆன்லைன் மூலம் வகுப்புகளை நடத்தும் அளவுக்கு காற்று மாசு ஏற்பட்டது.
இந்நிலையில், காற்று மாசுவை குறைக்க டெல்லி மாநில அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. இதன்படி, 15 ஆண்டுகளுக்கு பழைய வாகனங்களுக்கு பெட்ரோல், டீசல் கிடையாது என மாநில அரசு அறிவித்துள்ளது.
ஏப்ரல் 1
இதற்காக 15 வருடங்கள் பழமையான வாகனங்களை அடையாளம் காண பெட்ரோல் பங்க்குகளில் பிரத்யேக கருவியை பொருத்த அரசு திட்டமிட்டுள்ளது. மேலும், ஏப்ரல் 1 முதல் இந்த விதியை தீவிரமாக அமல்படுத்த உள்ளது.
கூடுதலாக, டெல்லிக்குள் நுழையும் கனரக வாகனங்களும் அங்கீகரிக்கப்பட்ட சுற்றுச்சூழல் தர அளவுகளை பூர்த்தி செய்திருக்க வேண்டும் என்ற கட்டுப்பாடு விதிக்கப்பட உள்ளது. மேலும், மிகப் பெரிய ஹோட்டல்கள், பெரும் வணிக வளாகங்கள் புகை எதிர்ப்பு கருவி பொருத்தப்படுவதை கட்டாயமாக்க உள்ளோம்.
டிசம்பர் இறுதிக்குள் டெல்லி பொதுப் போக்குவரத்துக்காக பயன்பாட்டில் உள்ள சிஎன்ஜி பேருந்துகளில் 90 சதவீதம் நீக்கப்பட்டு, அதற்கு பதிலாக மின்சாரப் பேருந்துகள் கொண்டுவரப்படும். டெல்லியில் ஏற்கனவே 2021 முதல் 15 ஆண்டுகளுக்கு பழைய வாகனங்கள் பயன்படுத்த தடை விதிக்கப்பட்டுள்ளது.