இந்த முறை ஜெயிலுக்கு செல்லும்போது.. தூக்குமேடை ஏற தயார் - அரவிந்த் கெஜ்ரிவால்!
இந்த முறை ஜெயிலுக்கு போகும்போது எப்போது வருவேன் என தெரியவில்லை என்று டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் தெரிவித்துள்ளார்.
அரவிந்த் கெஜ்ரிவால்
டெல்லி மதுபான கொள்கை ஊழல் வழக்கில் அம்மாநில முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் கடந்த மார்ச் மாதம் அமலாக்கத்துறையால் கைது செய்யப்பட்டார். இதையடுத்து அவர் திகார் சிறையில் அடைக்கப்பட்டார்.
இதனிடையே அவருக்கு 21 நாட்கள் இடைக்கால ஜாமீன் வழங்கிய உச்ச நீதிமன்றம் நாடாளுமன்ற தேர்தலின் இறுதிகட்ட வாக்குப்பதிவு முடிந்த அத்த நாள் சிறையில் சரணடைய வேண்டும் என்று உத்தரவிட்டது. இதை தொடர்ந்து தனது உடல்நிலையைக் காரணம் காட்டி இடைக்கால ஜாமீனை நீட்டிக்குமாறு உச்ச நீதிமன்றத்தில் அரவிந்த் கெஜ்ரிவால் கோரிக்கை மனு தாக்கல் செய்தார்.
ஆனால், கெஜ்ரிவாலின் மனுவைத் தள்ளுபடி செய்த உச்ச நீதிமன்றம் ஏற்கெனவே குறிப்பிட்ட ஜூன் 2-ம் தேதி சிறையில் சரணடையுமாறு உத்தரவிட்டது. இந்நிலையில் நாடாளுமன்ற தேர்தல் இறுதிகட்ட வாக்குப்பதிவு நேற்றோடு முடிவடைந்த நிலையில், இன்று திகார் சிறையில் சரணடைந்தார் டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால்.
சர்வாதிகாரம்
முன்னதாக இன்று ஆம் ஆத்மி அலுவலகத்தில் செய்தியாளர்களிடம் பேசிய அவர் "கெஜ்ரிவால் அனுபவம் வாய்ந்த திருடன் என்பதால் அவருக்கு எதிராக எந்த ஆதாரமும் இல்லை என நான் நம்புகிறேன் என்று பிரதமர் மோடி பேட்டியில் கூறினார். நான் அனுபவம் வாய்ந்த திருடன் என்று வைத்துக் கொள்வோம்.
உங்களிடம் ஆதாரம் இல்லை, என் மீது எந்த மீட்டெடுப்பும் இல்லை, அதனால் எந்த ஆதாரமும் இல்லாமல் என்னை சிறையில் அடைத்தீர்களா? இவனை சிறையில் அடைத்தால் முடியும் என்று நாடு முழுக்க ஒரு செய்தியை கொடுத்தார். ஒரு போலி வழக்கில் உங்கள் நிலைப்பாடு என்ன? யாரை வேண்டுமானாலும் கைதுசெய்து சிறையில் அடைப்பேன். நான் இந்த சர்வாதிகாரத்திற்கு எதிராகப் போராடுகிறேன்.
இந்த மாதிரியான சர்வாதிகாரத்தை நம் நாடு பொறுத்துக்கொள்ள முடியாது. அதிகாரம் சர்வாதிகாரமாக மாறும்போது சிறையும் பொறுப்பு என பகத்சிங் கூறினார். நாட்டை விடுவிக்க பகத்சிங் தூக்கிலிடப்பட்டார். இந்த முறை ஜெயிலுக்கு போகும்போது எப்போது வருவேன் என தெரியவில்லை. பகத் சிங் தூக்கிலிடப்பட்டார். நானும் தூக்குமேடை ஏற தயார்" என்று தெரிவித்துள்ளார்.