நபிகள் நாயகம் குறித்து அவதூறு கருத்து - பாஜக எம்எல்ஏ கைது!
தெலுங்கானா பாஜக எம்எல்ஏ ராஜா சிங் ஹைதராபாத் போலீஸாரால் கைது செய்யப்பட்டார்.
முனவர் ஃபரூக்கி
குஜராத் மாநிலத்தைச் சேர்ந்தவர் முனவர் ஃபரூக்கி. இவர் உலக நாடுகளில் ஸ்டாண்ட் அப் காமெடி நிகழ்ச்சிகளை நடத்தி வருகிறார். மத்தியில் ஆளும் பாஜகவின் செயல்பாடுகள் குறித்து நகைச்சுவை கலந்து விமர்சிப்பதை வாடிக்கையாக கொண்டுள்ளார்.

இதனால் முனவர் ஃபரூக்கியை கைது செய்யவும், அவரது நிகழ்ச்சிகளுக்கு அனுமதி மறுக்கவும் இந்துத்துவ அமைப்புகள் கண்டனம் தெரிவித்து வந்தன. இதன் அடிப்படையில் அவர் கைது செய்யப்பட்டார்.
இந்துத்துவ அமைப்பு
தொடர்ந்து அவரது நகழ்ச்சிகளும் ரத்து செய்யப்பட்டன. அதனையடுத்து, முனவர் ஃபரூக்கி இந்துத்துவ அமைப்பினரின் எதிர்ப்புகளுக்கு மத்தியில் ஐதராபாத்தில் நடந்த ஸ்டாண்ட் அப் காமெடி நிகழ்ச்சியில் நேற்று மாலை கலந்துகொண்டார்.

அதனால், ஏராளமான இந்துத்துவா அமைப்பினர் திரண்டு நின்று முழக்கங்களை எழுப்பினர். பாதுகாப்பு காரணங்களுக்காக நிகழ்ச்சி நடைபெறும் இடத்தில் 2,000 க்கும் அதிகமான போலீசார் குவிக்கப்பட்டனர்.
அவதூறு கருத்து
இந்நிலையில் கோஷாமால் தொகுதி பாஜக எம்.எல்.ஏ. ராஜா சிங், முனவர் ஃபரூக்கி மற்றும் அவரது தாயாரை விமர்சித்து ஒரு வீடியோவை வெளியிட்டார். அந்த வீடியோவில், பாஜக முன்னாள் செய்தித் தொடர்பாளர் நுபுர் ஷர்மாவைபோல் நபிகள் நாயகம் குறித்து ராஜா சிங் அவதூறாக பேசியதாக கூறப்படுகிறது.
வீடியோவின் முடிவில் நான் பேசிய அனைத்தும் நகைச்சுவை என்று அவர் கூறி இருக்கிறார். பாஜக எம்.எல்.ஏ. ராஜா சிங் பேசிய இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
பாஜக எம்.எல்.ஏ கைது
இந்த நிலையில் நபிகள் நாயகம் குறித்து அவதூறாக பேசிய ராஜா சிங்கை கைது செய்ய வலியுறுத்தி இஸ்லாமியர்கள் நேற்றிரவு கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
இந்நிலையில், தெலுங்கானா பாஜக எம்.எல்.ஏ. ராஜா சிங்கை ஹைதராபாத் போலீஸார் 3 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து கைது செய்தனர்.