அதிமுகவிற்கு ஆழ்ந்த அனுதாபங்கள் - விமர்சித்த அமைச்சர் சேகர் பாபு..!!
காங்கிரஸ் கட்சிக்கு அதிமுக அழைப்பு விடுத்துள்ள நிலையில், அதனை அமைச்சர் சேகர் பாபு விமர்சனம் செய்துள்ளார்.
காங்கிரஸ் கட்சிக்கு அழைப்பு
சில தினங்கள் முன்பு செய்தியாளர்களை சந்தித்த அதிமுகவின் முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார், பாஜகவிற்கான தங்களின் கூட்டணி கதவு மூடிவிட்டதாக கூறி, காங்கிரஸ் அதிமுகவுக்கு எதிரியில்லை என்றும் காங்கிரஸ் உள்பட அனைவருக்கும் தங்கள் கூட்டணி கதவுகள் திறந்தே உள்ளது என்று அதிரடியாக தெரிவித்தார்.
வரும் நாடாளுமன்ற தேர்தலில் தேசிய ஜனநாயக கூட்டணியில் இருந்து அதிமுக வெளியேறியிருக்கும் நிலையில், அக்கட்சி புது கூட்டணியை அமைக்கும் முனைப்பில் இருக்கும் சூழலில், இந்த கருத்து பரபரப்பாக பேசப்பட்டது.
சேகர் பாபு
விமர்சனம் காங்கிரஸ் திமுகவுடன் இந்தியா கூட்டணியில் வலுவாக நீடித்து வரும் நிலையில், கூட்டணி மாறுமா? என்ற கேள்வி உள்ளது.இந்நிலையில், அதிமுகவின் இந்த அழைப்பிற்கு தமிழக இந்து சமய அறநிலைய துறை அமைச்சர் சேகர் பாபு விமர்சித்து கருத்துக்களை தெரிவித்துள்ளார்.
செய்தியாளர்களை சந்தித்த அவர் பேசும் போது, பிற கட்சிகளை கூவிக்கூவி கூட்டணிக்கு அழைக்கிறது அதிமுக என்று கூறி, அதிமுகவிற்கு ஆழ்ந்த அனுதாபங்கள் என்றார். தொடர்ந்து வள்ளலார் சர்வதேச ஆய்வு மைய விவகாரம் குறித்து பேசிய அவர், இந்த ஆய்வு மைய அமைப்பதற்கு எதிர்ப்பு தெரிவிப்பது என்பது கண்டனத்துக்கு உரியது என்றும் கூறினார்.