அரசின் சத்துணவு திட்டம் - கர்ப்பிணிக்கு வழங்கப்பட்ட உணவில் இருந்த பாம்பு
கர்ப்பிணி பெண்ணுக்கு வழங்கப்பட்ட உணவில் இறந்த பாம்பு குட்டி கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
பாம்பு குட்டி
சமீப காலமாக ரயில்களில் வழங்கப்பட்ட உணவில் கரப்பான் பூச்சி, ஆன்லைனில் ஆர்டர் செய்யப்பட்ட உணவில் மனித விரல், விமானத்தில் வழங்கப்பட்ட உணவில் பிளேடு போன்ற அதிர்ச்சி சம்பவங்கள் வெளிவந்த வண்ணம் உள்ளது. இந்நிலையில் கர்ப்பிணி பெண் ஒருவருக்கு வழங்கப்பட்ட உணவில் இறந்த பாம்பு குட்டி ஒன்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
மகாராஷ்டிரா மாநிலத்தில் கர்ப்பிணிப் பெண்கள், பாலூட்டும் தாய்மார்கள் மற்றும் 6 மாதம் முதல் 3 வயது வரையிலான குழந்தைகளுக்கு சத்துணவு திட்த்தின் கீழ் அங்கன்வாடி மூலம் உணவு பொட்டலம் வழங்கப்படுகிறது. இந்நிலையில் சாங்லி மாவட்டத்தில் உள்ள பலுஸ் நகரில் வசிக்கும் கர்ப்பிணி பெண் ஒருவருக்கு வழங்கப்பட்ட உணவு பொட்டலத்தில் இறந்த பாம்பு குட்டி ஒன்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
விசாரணை
இந்த சம்பவம் செவ்வாய்க்கிழமை அதிகாரிகளின் கவனத்திற்கு கொண்டு வரப்பட்டது. புகாரைப் பெற்ற சாங்லி மாவட்ட ஆட்சியர் ராஜா தயாநிதி, முழுமையான விசாரணைக்கு உத்தரவிட்டுள்ளார். உணவு பாதுகாப்பு அதிகாரிகள் சம்மந்தப்பட்ட அங்கன்வாடியில் ஆய்வு செய்துள்ளனர். இதற்கிடையில், பாலஸ் சட்டமன்றத் தொகுதி எம்.எல்.ஏ விஸ்வஜீத் கதம் இந்த விவகாரத்தை சட்டமன்ற கூட்டத்தொடரில் எழுப்பினார்.
இதுகுறித்து அவர் கூறுகையில், "கர்ப்பிணிப் பெண்ணுக்கு வழங்கப்பட்ட உணவில் பாம்பு குட்டி இருந்தது குறித்து என் கவனத்திற்கு கொண்டு வரப்பட்டது. முன்னதாக தானிய வகை உணவுகள் தனித்தனியாக வழங்கப்பட்டன. ஆனால், கடந்த சில மாதங்களாக தனியார் நிறுவனம் கலவை உணவுகள் வழங்குவதாகவும், அதிலும் தரமற்ற உணவுகள் வழங்குவதாகவும்" தெரிவித்துள்ளார்.