குழந்தை பிறந்து 3 நாட்களே ஆன நிலையில் தாய் உயிரிழப்பு - மருத்துவர்கள் அலட்சியம் - உறவினர்கள் குற்றச்சாட்டு

By Nandhini Jun 14, 2022 10:29 AM GMT
Report

திருவாரூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் குழந்தை பிறந்து 3 நாட்களே ஆன நிலையில் தாய் பர்வீன் பானு உயிரிழப்பு சம்பவம் பெரும் பரபரப்பையும், சலசலப்பையும் ஏற்படுத்தியுள்ளது.

தாய் உயிரிழப்பு

திருவாரூர், தேவர் கண்டநல்லூர் பகுதியை சேர்ந்தவர் பர்வீன் பானு. இவர் பிரசவத்திற்காக திருவாரூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் கடந்த 7ம் தேதி அனுமதிக்கப்பட்டார். இவருக்கு குழந்தை பிறந்து 3 நாட்கள் ஆகிறது.

இந்நிலையில், இன்று பர்வீன் பானு உயிரிழந்துள்ளார். பர்வீன் பானு உயிரிழப்புக்கு மருத்துவர்களே காரணம் என்று உறவினர்கள் குற்றச்சாட்டி போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இதனால், ஏராளமான போலீசார் அங்கு குவிக்கப்பட்டுள்ளனர். மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் பெரும் பரபரப்பு நிலவி வருகிறது.

குழந்தை பிறந்து 3 நாட்களே ஆன நிலையில் தாய் உயிரிழப்பு - மருத்துவர்கள் அலட்சியம் - உறவினர்கள் குற்றச்சாட்டு | Death Sad News Maternal Mortality

இதுகுறித்து பர்வீன் பானுவின் உறவினர் கூறுகையில்...

பர்வீன் பானு முன்னதாகவே இதய அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டுள்ளது. இதனால், அவரை 10 தினங்களுக்கு முன்பாகவே பிரசவத்திற்காக மருத்துவமனையில் அனுமதிக்குமாறு மருத்துவர்கள் கூறினர். அதனால், கடந்த 7ம் தேதியே அவரை பிரசவத்திற்காக அனுமதித்தோம். குழந்தை பிறந்து 3 நாட்கள் ஆன நிலையில், இன்று சாதாரண வார்டுக்கு பர்வீன் பானு மாற்றப்பட்டார். இன்று காலை முதல் அவர் தொடர்ந்து மயக்கம் வருவதாக கூறினார்.

இதுகுறித்து வார்டில் உள்ள செவிலியரிடம் தொடர்ந்து பலமுறை கூறினோம். ஆனால், மருத்துவர் வந்து கவனிப்பார் என்று அவர் அலட்சியமாக பதில் அளித்தார். நீண்ட நேரம் ஆகியும் எந்த ஒரு மருத்துவரும் பர்வீனை வந்து பார்க்காததால், பர்வீன் பானு இறந்துவிட்டார். பர்வீன் பானு உயிரிழப்புக்கு முழுக்க முழுக்க காரணம் மருத்துவமனை நிர்வாகத்தின் அலட்சியமே என்று கண்ணீரோடு கூறினார்.