பாலியல் குற்றம் புரிந்தால் மரண தண்டனை - மேற்குவங்க அரசு மசோதா நிறைவேற்றம்!
பாலியல் கொலையில் ஈடுபடும் குற்றவாளிகளுக்கு மரண தண்டனை வழங்கும் சட்டத் திருத்த மசோதா மேற்கு வங்க சட்டப்பேரவையில் மசோதா நிறைவேற்றப்பட்டது.
கொல்கத்தா
கொல்கத்தா ஆா்.ஜி.கா் அரசு மருத்துவமனையில் கடந்த 8-ம் தேதி இரவு பெண் பயிற்சி மருத்துவா் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொடூரமாக கொலை செய்யப்பட்ட சம்பவம் நாடு முழுவதும் அதிா்வலைகளை ஏற்படுத்தியது. இதுதொடர்பாக மருத்துவமனை வளாகத்தில் தன்னார்வலராக பணியாற்றிய சஞ்சய் ராய் கைது செய்யப்பட்டார்.
தொடர்ந்து இந்த வழக்கை சிபிஐ விசாரித்து வருகிறது. குற்றவாளிகளுக்கு கடுமையான தண்டனை வழங்கக் கோரி மேற்கு வங்கம் மட்டுமின்றி நாட்டின் பல்வேறு மாநிலங்களிலும் உள்ள மருத்துவா்கள், மருத்துவ மாணவா்கள் உள்பட பல தரப்பினரும் தொடா் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனா்.
இந்த சூழலில் திங்கள்கிழமை மேற்கு வங்க சட்டப்பேரவையின் இரண்டு நாள் சிறப்புக் கூட்டத்தொடா் தொடங்கியது. அதில் பாலியல் வன்கொடுமையில் ஈடுபடும் குற்றவாளிகளுக்கு மரண தண்டனை விதிக்கும் சட்டத் திருத்த மசோதாவை மாநில சட்ட அமைச்சா் மலொய் கதக் தாக்கல் செய்தாா்.
மசோதா நிறைவேற்றம்
இந்த மசோதாவுக்கு ஆளுங்கட்சியான திரிணமூல் காங்கிரஸ், எதிா்க்கட்சியான பாஜக உள்பட அனைத்து உறுப்பினா்களும் ஆதரவளித்ததையடுத்து ஒருமனதாக நிறைவேற்றப்பட்டது.
அபராஜிதா பெண்கள் மற்றும் குழந்தைகள் (மேற்கு வங்கம் குற்றவியல் சட்டங்கள் மற்றும் திருத்தம்) மசோதா, 2024’ எனப் பெயரிடப்பட்ட இந்த மசோதாவில் பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான பாலியல் வன்கொடுமைகளைத் தடுத்து பாதுகாப்பளிக்கும் வகையில் திருத்தங்கள் கொண்டுவரப்பட்டுள்ளன.
பெண்களை பாலியல் கொலை செய்தாலோ அல்லது பாலியல் துன்புறுத்தலால் பெண்கள்சுயநினைவை இழந்து பெரிதும் பாதிக்கப்பட்டாலோ இந்தக் குற்றத்தில் ஈடுபட்ட குற்றவாளிகளுக்கு மரண தண்டனை அளிக்க திருத்த மசோதாவில் வழிவகை செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
மேலும், கூட்டுப் பாலியல் வன்கொடுமை அல்லது பாலியல் வன்கொடுமையில் ஈடுபடும் குற்றவாளிகளுக்கு பரோல் இன்றி ஆயுள் தண்டனை வழங்கவும் மசோதாவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.