மணிப்பூர் விவகாரம், பிரதமர் அவசர நடவடிக்கை எடுக்க வேண்டும் - டெல்லி மகளிர் ஆணையம் கடிதம்!
மணிப்பூரில் வன்முறையை தடுக்க அவசர நடவடிக்கை எடுக்குமாறு டெல்லி மகளிர் ஆணையம் கடிதம் எழுதியுள்ளது.
கண்டனம்
சமீப காலமாக மணிப்பூரில் தொடர்ந்து வன்முறை வெடித்து வருகிறது. இச்சமயத்தில் 2 பெண்களை நிர்வாணமாக அழைத்து சென்றது நாட்டையே அதிர்ச்சியில் உறையவைத்தது.
இது குறித்து பலரும் கண்டனம் தெரிவித்து வந்த நிலையில் டெல்லி மகளிர் ஆணையத்தின் தலைவி சுவாதி மலிவாலும் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். மேலும், இது குறித்து அவசர நடவடிக்கை எடுக்க கோரி பிரதமர் மோடிக்கு கடிதம் எழுதியுள்ளார்.
டுவிட்டர் பதிவு
இதனை தொடர்ந்து, அவர் தனது டுவிட்டர் பக்கத்தில், "மணிப்பூரில் வன்முறையைத் தடுக்க அவசர நடவடிக்கைகள் எடுக்குமாறு பிரதமர் மோடி மற்றும் மணிப்பூர் முதல்-மந்திரிக்கு கடிதம் எழுதுகிறேன். அந்த பெண்கள் மீது தாக்குதல் நடத்திய வீடியோவில் உள்ள ஆண்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும்.
உயிர் தப்பியவர்கள், அவர்களது குடும்பத்தினர் மற்றும் பிற சிறுமிகள் மற்றும் பெண்களை சந்திக்க முதல்-மந்திரி பைரேன் சிங் என்னை அனுமதிக்க வேண்டும்" என்று பதிவிட்டுள்ளார். மணிப்பூரில் பெண்களுக்கு எதிரான பாலியல் குற்றங்கள் தொடர்பான உண்மை கண்டறியும் அறிக்கையை அரசிடம் சமர்ப்பிக்க வேண்டும் என கூறிய இவர், இதன் மூலம் விரைவில் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் தெரிவித்துள்ளார்.