தயாநிதி மாறன் வழக்கு; நீதிமன்றத்தில் ஆஜரான எடப்பாடி பழனிசாமி - நடந்தது என்ன?

Dayanidhi Maran Edappadi K. Palaniswami
By Karthikraja Aug 27, 2024 07:20 AM GMT
Report

தயாநிதி மாறன் தொடர்ந்த அவதூறு வழக்கில் எடப்பாடி பழனிசாமி நீதிமன்றத்தில் நேரில் ஆஜரானார்.

எடப்பாடி பழனிசாமி பிரச்சாரம்

நடந்து முடிந்த நாடாளுமன்ற தேர்தலில், மத்திய சென்னையில் அதிமுக கூட்டணி சார்பில் போட்டியிட்ட தேமுதிக வேட்பாளர் பார்த்தசாரதியை ஆதரித்து அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி தேர்தல் பிரச்சாரம் மேற்கொண்டார். 

edappadi palanisamy campaign

பிரச்சாரத்தின் போது பேசிய எடப்பாடி பழனிசாமி, “மத்திய சென்னை தொகுதியில் திமுக சார்பில் போட்டியிடும் தயாநிதி மாறன் அவருடைய நாடாளுமன்றத் தொகுதி மேம்பாட்டு நிதியில் 75 சதவீதத்தைச் செலவு செய்யவே இல்லை. அப்படியென்றால், இவர் எப்படி செயல்பட்டிருப்பார் என்பதை மக்கள் எண்ணிப் பார்க்க வேண்டும்” என பேசி இருந்தார். 

தவெக அதிமுக கூட்டணி குறித்த முடிவு எப்பொழுது? எடப்பாடி பழனிசாமி

தவெக அதிமுக கூட்டணி குறித்த முடிவு எப்பொழுது? எடப்பாடி பழனிசாமி

தயாநிதி மாறன் வழக்கு

இதனையடுத்து எடப்பாடி பழனிசாமிக்கு எதிராக திமுக எம்.பி. தயாநிதி மாறன் சென்னை எழும்பூர் நீதிமன்றத்தில் அவதூறு வழக்கு தொடர்ந்திருந்தார். அந்த வழக்கில், “தொகுதி மேம்பாட்டு நிதியை 75% பயன்படுத்தவில்லை என சென்னை புரசைவாக்கத்தில் நடந்த அதிமுக பொதுக்கூட்டத்தில் எடப்பாடி பழனிசாமி பேசிய பேச்சு தனது நற்பெயருக்கு களங்கம் விளைவிக்கும் வகையில் உள்ளது” எனத் தெரிவித்திருந்தார். இந்த வழக்கு எம்.பி, எம்.எல்.ஏக்கள் வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு நீதிமன்றத்திற்கு மாற்றப்பட்டது. 

dayanidhi maran

வழக்கு விசாரணை தொடர்ந்து நடைபெற்று வரும் நிலையில், எடப்பாடி பழனிசாமி இன்று (27.08.2024) நேரில் ஆஜராக வேண்டுமென நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்திருந்தது. இந்நிலையில் எடப்பாடி பழனிசாமி நேரில் ஆஜராக இருந்ததால் ஏராளமான அதிமுக நிர்வாகிகள் நீதிமன்றத்தில் குவிந்திருந்தனர். இதனால் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது.

எடப்பாடி பழனிசாமி மனு

இதனையடுத்து நீதிமன்றத்தில் ஆஜர் ஆன எடப்பாடி பழனிசாமி தன் மீதான குற்றச்சாட்டை மறுப்பதாக பதிலளித்துள்ளார். வழக்கு விசாரணை செப்டம்பர் 19 ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது. அவர் சார்பில் ஆஜரான வழக்கறிஞர் இன்பதுரை, "பத்திரிகை செய்திகள் அடிப்படையில் தான் எடப்பாடி பழனிசாமி பேசியிருந்தார். அவதூறு வழக்கை தொடர்ந்து நடத்த இருப்பதாக நீதிமன்றத்தில் தெரிவித்தோம். என செய்தியாளர்களிடம் தெரிவித்துள்ளார். 

edappadi palanisamy

மேலும் நீதிமன்றத்தில் நேரில் ஆஜராக விலக்கு அளிக்க கோரி எடப்பாடி பழனிசாமி மனுதாக்கல் செய்துள்ளார். அந்த மனுவில், "70 வயதாகிவிட்டது, மூத்த குடிமகன் மற்றும் எதிர்க்கட்சித் தலைவர் என்பதால் வழக்கில் நேரில் ஆஜராவதில் இருந்து விலக்கு அளிக்க வேண்டும். உடல்நலக்கோளாறால் பாதிக்கப்பட்டு, வாழ்நாள் முழுவதும் மருந்துகளை எடுத்துவருகிறேன். வழக்கை தாமதப்படுத்தும் நோக்கம் இல்லை. எனவே நேரில் ஆஜராக விலக்கு அளிக்க கோருகிறேன் என தெரிவித்துள்ளார்.