நாளை தேர்தல் - இபிஎஸ் மீது பரபரப்பு வழக்கு தொடுத்த தயாநிதி மாறன்!! வழக்கு பின்னணி..?
தமிழக எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி மீது தயாநிதி மாறன் வழக்கு ஒன்றை தொடுத்துள்ளார்.
செய்தியாளர் சந்திப்பு
வழக்கை தொடர்ந்த பிறகு செய்தியாளர்களை சந்தித்த தயாநிதி மாறன், எடப்பாடி பழனிசாமி தேர்தல் பிரசாரத்தின்போது, எனது தொகுதி மேம்பாட்டு நிதியை 75 சதவீதம் நான் பயன்படுத்தாத பாராளுமன்ற உறுப்பினர் என உண்மைக்கு புறம்பாக அவதூறுபரப்பியுள்ளார்.
அதன் காரணமாக, 24 மணி நேரத்திற்குள் மன்னிப்பு கேட்கும்படி நோட்டீஸ் அவருக்கு அனுப்பியுள்ளேன். ஆனாலும், பதில் வராத காரணத்தால், இபிஎஸ் மீது கிரிமினல் அவதூறு வழக்கு தொடர்ந்துள்ளோம் என குறிப்பிட்டுள்ளார்.
வழக்கு பின்னணி
கடந்த ஏப்ரல் 15ஆம்தேதி மத்திய சென்னையின் மக்களவை தொகுதிக்குட்பட்ட எழும்பூர், புரசைவாக்கத்தில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் கூட்டணி கட்சி வேட்பாளரான தேமுதிகவின் பார்த்தசாரதியை ஆதரித்து பிரச்சாரம் மேற்கொண்டார் அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி.
அப்போது அவர், மத்திய சென்னையின் திமுகவின் நாடாளுமன்ற உறுப்பினர் தயாநிதி மாறன் மீது பல்வேறு குற்றச்சாட்டுகளை வைத்தார். அதாவது தொகுதி மேம்பட்டு நிதியில் இருந்து 75% நிதியை அவர் பயன்படுத்தவில்லை என்றும் குறிப்பிட்டார்.
இதனையடுத்து, தன் மீது சுமத்தியுள்ள குற்றச்சாட்டுகள் உண்மைக்குப் புறம்பானது என்றும் வேண்டுமென்றே தனது நற்பெயருக்கு களங்கம் விளைவிக்கும் வகையில் சித்தரிக்கப்பட்டது என கண்டனம் தெரிவித்திருந்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது.