நிழல் உலக தாதா தாவூத் இப்ராஹிம் மருத்துவமனையில் அனுமதி - விஷம் கொடுக்கப்பட்டதா..?
நிழல் உலக தாதா தாவூத் இப்ராஹிம் உடல்நலக் குறைவு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
தாவூத் இப்ராஹிம்
மும்பையில் நிழல் உலக தாதாவாக இருந்து, 1993 மும்பை தொடர் குண்டு வெடிப்பு சம்பவத்தில் தொடர்புடையவர் தாவூத் இப்ராஹிம். இந்தியாவால் தேடப்பட்டு வரும் நபரான அவர், இங்கிருந்து தப்பியோடி பாகிஸ்தானில் தஞ்சமடைந்தார்.
தாவூத் இப்ராகிம் பாகிஸ்தான் பெண் ஒருவரை 2வது திருமணம் செய்து கொண்டு கராச்சியில் தங்கியிருப்பதாக ஏற்கனவே தகவல்கள் வெளியாகியிருந்தது. இந்நிலையில் அவர் கடும் உடல்நலக் குறைவு காரணமாக கராச்சியில் உள்ள தனியார் மருத்துவமனை ஒன்றில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
போலீஸார் முயற்சி
மேலும், தாவூத் இப்ராஹிமுக்கு விஷம் கொடுக்கப்பட்டிருக்கலாம் என சமூக வலைத்தளங்களில் தகவல்கள் பரவி வருகின்றன. அந்த மருத்துவமனையில் தாவூத் இப்ராஹிம் 2 நாட்களுக்கு முன் அனுமதிக்கப்பட்டதாகவும், அங்கு போலீஸார் பலத்த பாதுகாப்பில் ஈடுபட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.
மேலும் தாவூத் அனுமதிக்கப்பட்ட அந்த தளத்தில் ஏற்கனவே இருந்த நோயாளிகள் வேறு தளங்களுக்கு மாற்றப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது. மேலும், தாவூத் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டது குறித்த கூடுதல் தகவல்களை அவரது உறவினர்களான அலிஷா பார்கர் மற்றும் சஜித் வாக்லே ஆகியோரிடம் இருந்து பெற மும்பை போலீஸார் முயற்சி செய்து வருகின்றனர்.