தண்ணீரை தொட்ட தலித் சிறுவன் ..அடித்தே கொன்ற ஆசிரியர் - தலைவிரித்தாடும் தீண்டாமை!
தனியார் பள்ளி ஒன்றில் தலித் சமூகத்தைச் சேர்ந்த சிறுவன் பானையில் உள்ள தண்ணீரை எடுத்து குடித்ததால், ஆசிரியரால் தாக்கப்பட்டு உயிரிழந்துள்ளார்.
தீண்டாமை
ராஜஸ்தான் மாநிலம் ஜலோர் மாவட்டம் சுரானா கிராமத்தைச் சேர்ந்த ஒன்பது வயது சிறுவன் இந்திரா மேக்வால். தலித் சமூகத்தைச் சேர்ந்த இந்த சிறுவன் அருகே உள்ள தனியார் பள்ளியில் பயின்று வந்தார்.
இந்த சிறுவன் கடந்த ஜூலை 20ஆம் தேதி பள்ளியில் உள்ள குடிநீர் பானையில் இருந்து தண்ணீர் எடுத்து குடித்துள்ளார். இதை அப்பள்ளியில் வேலை பார்க்கும் ஆசிரியர் சயில் சிங் பார்த்த நிலையில், தலித் சிறுவன் பானையில் இருந்து நீர் எடுத்து குடித்தான் என்ற காரணத்திற்காகவே அவனை கடுமையாக தாக்கி அடித்துள்ளார்.
ஆசிரியர் கொடூர தாக்குதல்
இந்த கொடூர தாக்குதலில் 9 வயது சிறுவன் நிலை குலைந்து மயங்கி விழுந்துள்ளார். தாக்குதலில் சிறுவனின் முகம், காது, தலை உள்ளிட்ட பகுதிகளில் படுகாயங்கள் ஏற்பட்டுள்ளன.
जालौर के सायला थाना क्षेत्र में एक निजी स्कूल में शिक्षक द्वारा मारपीट के कारण छात्र की मृत्यु दुखद है। आरोपी शिक्षक के विरुद्ध हत्या व SC/ST एक्ट की धाराओं में प्रकरण पंजीबद्ध कर गिरफ्तारी की जा चुकी है।
— Ashok Gehlot (@ashokgehlot51) August 13, 2022
முதலில் அந்த சிறுவன் மாவட்ட மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில், பின்னர் உயத்பூர் மருத்துவமனையில் உயர் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். பின்னர் அங்கும் உடல் நிலையில் முன்னேற்றம் ஏற்படாததால் அங்கிருந்து அவர் அகமதாபாத் அழைத்து செல்லப்பட்டுள்ளார்.
முதல்வர் கண்டனம்
அங்கும் அந்த சிறுவன் உடல் நலம் தேராத நிலையில் நேற்று தாக்குதலுக்கு ஆளான சிறுவன் பரிதாபமாக உயிரிழந்துள்ளார். இந்த சம்பவம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்திய நிலையில், தாக்குதல் நடத்திய 40 வயதான ஆசிரியர் சயில் சிங்,
கொலை மற்றும் எஸ்சிஎஸ்டி வன்கொடுமை சட்டப் பிரிவுகளின் கீழ் கைது செய்யப்பட்டுள்ளார். இந்த சம்பவத்திற்கு மாநில முதலமைச்சர் அசோக் கெலாட் கண்டனம் மற்றும் வருத்தம் தெரிவித்துள்ள நிலையில், வழக்கை விரைந்து விசாரித்து நீதி வழங்க உத்தரவிட்டுள்ளார்.