திருப்பதிக்கு தினமும் ஒருநாள் சுற்றுலா; அதுவும் விரைவு தரிசன அனுமதி - அரசு அறிவிப்பு!
திருப்பதிக்கு தினமும் பக்தர்களை சுற்றுலா அழைத்துச் செல்ல அரசு வழிவகை செய்துள்ளது.
திருப்பதி சுற்றுலா
தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சி கழகத்தின் மூலம் தினசரி திருப்பதி செல்ல ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. அதுகுறித்து தமிழக சுற்றுலா வளர்ச்சி கழக மேலாண்மை இயக்குநர் சமயமூர்த்தி அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.
அதில், திருப்பதி சுற்றுலா செல்லும் பேருந்து, சென்னை வாலாஜா சாலை, தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சி கழகத்தின் தலைமை அலுவலகமான சுற்றுலா வளாகத்தில் இருந்து தினசரி அதிகாலை 4.30 மணிக்கு சுற்றுலா பயணிகளை அழைத்து செல்கிறது.
மேலும் கோயம்பேடு, ரோகினி திரையரங்கிற்கு எதிர்புறம் இருந்தும், பூந்தமல்லி ரோடு திருப்பதி ரோடு இணையும் சந்திப்பு (சங்கீதா ஓட்டல் அருகில்), திருவள்ளூர் பகுதியில் மணவாளன் நகர் இந்திரா காந்தி சிலை அருகில் ஆகிய இடங்களிலும் திருப்பதி சுற்றுலா செல்லும் பயணிகளை பேருந்தில் ஏற்றிக்கொள்ள ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
முழு விவரம்
சுற்றுலா பயணிகளுக்கு காலை உணவு திருத்தணி ஓட்டல் தமிழ்நாடு உணவகத்தில் வழங்கப்படுகின்றது. சுற்றுலா பயணிகள் முடி காணிக்கை, விரைவு தரிசன அனுமதி சீட்டின் மூலம் தரிசனம் செய்ய ஏற்பாடு, நபர் ஒருவருக்கு திருப்பதி லட்டு ஒன்று வழங்கப்படுகின்றது.
கீழ் திருப்பதியில் மதிய உணவும், திருத்தணி தமிழ்நாடு ஓட்டல் உணவகத்தில் இரவு உணவும் வழங்கப்படுகின்றது. திருப்பதி சுற்றுலா முடிந்து சென்னை வாலாஜா சாலை, தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சிக் கழகத்தின் தலைமை அலுவலகத்தில் கொண்டு சேர்ப்பதுடன் திருப்பதி சுற்றுலா பயணம் முடிவு பெறுகின்றது.
தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சி கழகத்தின் பயணத் திட்டங்களுக்கு முன்பதிவு செய்ய தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சி கழகத்தின் www.ttdconline.com இணையதள பக்கத்தில் முன்பதிவு செய்யலாம்.
சுற்றுலா வளாகத்திற்கு நேரில் வருகை தந்தோ முன்பதிவு செய்யலாம். மேலும் விவரங்களுக்கு தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சிக் கழக கட்டணமில்லா தொலைபேசி எண் 180042531111 மற்றும் 044-25333333, 044-25333444 தொடர்பு கொள்ளலாம்.