லிப்ஸ்டிக் பூசிக் கொண்டு வளம் வந்த மேயரின் தபேதார் - டிரான்ஸ்பர் செய்த மாநகராட்சி?
லிப்ஸ்டிக் போட்டு பணிக்கு வந்ததால் சென்னை மேயரின் தபேதார் டிரான்ஸ்பர் செய்யப்பட்டுள்ளார்.
மேயரின் தபேதார்
தலைநகர் சென்னையில் மேயராக ப்ரியா உள்ளார். மேயரின் பெண் தபேதாராக இருந்தவர் மாதவி (50). சீருடையில் இருக்கும் அவர் தமது உதட்டுக்கு லிப்ஸ்டிக் பூசிக் கொண்டு வருவதை வழக்கமாக கொண்டதாக கூறப்படுகிறது.
இதனை அறிந்த மேயரின் தனி உதவியாளர் சிவசங்கர் என்பவர் மாதவியை அழைத்து உதட்டுக்கு சாயம் பூசிக் கொண்டு வருவது கூடாது என்று கண்டித்துள்ளார். எனினும் பேச்சை கேளாமல் மாதவி உதட்டுச்சாயத்துடன் வந்ததாக கூறப்படுகிறது.
இதையடுத்து, அவரிடம் இது குறித்து விளக்கமளிக்குமாறு கோரி, ஆகஸ்ட் 6ம் தேதி மெமோவும் வழங்கப்பட்டு உள்ளது. அதிகாரிகளின் உத்தரவுகளுக்கு கீழ்படியவில்லை, என்ன காரணம் என்று கூறுமாறு விளக்கம் கேட்கப்பட்டுள்ளது.
டிரான்ஸ்பர்..
அதற்கு பதில் அளித்த தபேதார் மாதவி, இது போன்ற அறிவுறுத்தல்கள் மனித உரிமைக்கு எதிரானது. யாரிடமும் பேசக்கூடாது, உதட்டுச்சாயம் அணியக்கூடாது என்று எந்த அரசாங்க உத்தரவும் இல்லை. அதுபோன்ற உத்தரவுகள் இருந்தால் காட்டுங்கள் என்று கூறி உள்ளார்.
அதையே தமது விளக்கமாகவும் மேயரின் உதவியாளருக்கு அனுப்பி வைத்திருக்கிறார். மாதவியின் விளக்கத்தை ஏற்க மறுத்து, அவரை உடனடியாக மணலிக்கு இடமாற்றம் செய்து உத்தரவு பிறப்பிக்கப்பட்டு உள்ளது. இந்த விவகாரம் மேயர் பிரியாவுக்கு தெரியவர, அவர் இது பற்றி விசாரித்துள்ளார்.
அப்போது, தபேதார் மாதவி லிப்ஸ்டிக் விவகாரத்தால் இடமாற்றம் செய்யப்படவில்லை, பணியை சரியாக செய்யாத காரணத்தினால் மட்டுமே மெமோ கொடுக்கப்பட்டு பணியிட மாற்றம் செய்யப்பட்டார் என மாநகராட்சி மேயர் அலுவலகம் தெரிவித்துள்ளது.