மிரட்டப் போகும் மாண்டஸ் புயல்: சென்னைக்கு ரெட் அலர்ட் - தயாராகும் மீட்புப் படை!
சென்னை உள்ளிட்ட 8 மாவட்டங்களுக்கு நாளை மறுதினம் ரெட் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது.
மாண்டஸ் புயல்
வங்கக்கடலில் நிலைகொண்டிருந்த குறைந்த காற்றழுத்த தாழ்வுப்பகுதி, தாழ்வு மண்டலமாக வலுப்பெற்றது. இது மேற்கு, வடமேற்கு திசையில் நகர்ந்து, புயலாக இன்று மாலை மாறும் என்று வானிலை மையம் கணித்துள்ளது.
இதற்கு மாண்டஸ் எனப் பெயரிடப்பட்டுள்ளது. இது தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் அதனையொட்டி தெற்கு ஆந்திரா கடலோரப் பகுதியை அடுத்த 48 மணிநேரத்தில் வந்தடையும் எனக் கூறப்படுகிறது. சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு, விழுப்புரம், கடலூர், மயிலாடுதுறை, நாகப்பட்டினம் மாவட்டங்களில் நாளை மிக கனமழை பெய்யும் என்று கணிக்கப்பட்டுள்ளது.
ரெட் அலர்ட்
மேலும், ராணிப்பேட்டை, காஞ்சிபுரம், திருவண்ணாமலை, கள்ளக்குறிச்சி, பெரம்பலூர், அரியலூர், திருச்சி, தஞ்சாவூர், திருவாரூர், புதுக்கோட்டை, சிவகங்கை, ராமநாதபுரம் ஆகிய 12 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு உள்ளது.
வரும் 9ஆம் தேதி சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, விழுப்புரம், கடலூர், மயிலாடுதுறை, நாகப்பட்டினம் ஆகிய 8 மாவட்டங்களிலும், புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளிலும் அதீத கனமழைக்கான ரெட்அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது.