தோனி இதனால்தான் முன்வரிசையில் களமிறங்கவில்லை - பயிற்சியாளர் விளக்கம்
தோனி முன்வரிசையில் பேட்டிங் செய்ய களமிறங்காதது குறித்து சிஎஸ்கே பயிற்சியாளர் விளக்கமளித்துள்ளார்.
ரசிகர்கள் ஆதங்கம்
2025 ஐபிஎல் தொடர் மார்ச் 22 முதல் மே 25 வரை நடைபெற உள்ளது. இதில் நேற்று ராஜஸ்தான் ராயல்ஸ் - சென்னை சூப்பர் கிங்ஸ் அணிகள் மோதின.
இந்த ஆட்டத்தில் ராஜஸ்தான் நிர்ணயித்த 182 ரன்கள் இலக்கை எட்ட முடியாத சென்னை அணி 176 ரன்கள் மட்டுமே அடித்து தோல்வியடைந்தது. கடந்த போட்டியில் 9-வது வரிசையில் களமிறங்கியதால் பெரும் விமர்சனங்களை சந்தித்த தோனி, இந்த முறை முன்னதாகவே இறங்கினார்.
பயிற்சியாளர் விளக்கம்
கடைசி ஓவரின் முதல் பந்தில் தோனி (16 ரன்) கேட்ச் ஆனார். இருப்பினும், தோனி இன்னும் முன்வரிசையில் களமிறங்கி இருக்க வேண்டும் என்று ரசிகர்கள் ஆதங்கம் தெரிவித்துள்ளனர். இந்நிலையில் இதுகுறித்து பேசியுள்ள சென்னை அணியின் பயிற்சியாளரான ஸ்டீபன் பிளெமிங்,
"எம்.எஸ்.தோனி நேரத்தை பொறுத்து மதிப்பிடுகிறார். அவரது உடல், முழங்கால்கள் முன்பு இருந்ததைப் போல இல்லை. அவர் நன்றாக நகர்கிறார். இருப்பினும் சில பிரச்சினைகள் இன்னும் உள்ளன. அவரால் 10 ஓவர்கள் முழுவதுமாக பேட்டிங் செய்ய முடியாது. எனவே, அவர் நம்மால் அணிக்கு என்ன கொடுக்க முடியும் என்பதை மதிப்பிடுகிறார்.
இன்று போல் ஆட்டம் சமநிலையில் இருந்தால், அவர் கொஞ்சம் முன்னதாகவே பேட்டிங் செய்ய செல்வார். மற்ற நேரங்களில் வீரர்களை ஆதரிப்பார். கேப்டனுக்கு உதவுவது, விக்கெட் கீப்பிங் போன்றவற்றில் தோனி இப்போதும் மிகவும் மதிப்புமிக்கவர். எனவே, பாருங்கள் 13 - 14 ஓவர்களில் அணியின் நிலையை பொறுத்து அவர் களமிறங்குவார்" எனத் தெரிவித்துள்ளார்.