தொடர் வெடிகுண்டு மிரட்டல்; 50+ விமானங்களில் சோதனை - இவ்வளவு கோடி இழப்பா?
வெடிகுண்டு மிரட்டலால் 50+ விமானங்களில் பல கோடி ரூபாய் இழப்பு ஏற்பட்டுள்ளது.
வெடிகுண்டு மிரட்டல்
கடந்த ஒரு வாரமாக விமானங்களுக்கு தொடர்ந்து வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டு வருகிறது. அந்த வரிசையில் ஒரே நாளில் ஏர் இந்தியா விமானம், இண்டிகோ உட்பட 10 விமானங்களுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது.
இதுவரை சுமார் 50க்கும் அதிகமான விமானங்களுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்ட நிலையில், விமான நிறுவனங்களுக்கு ஒட்டுமொத்தமாக சுமார் 80 கோடி ரூபாய் வரை இழப்பு ஏற்பட்டுள்ளது. இதற்கிடையில், வெடிகுண்டு மிரட்டல்கள் வதந்தி என்பதை உறுதி செய்த அதிகாரிகள், அச்சுறுத்தல் ஏற்படுத்தியவர்கள் குறித்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
கோடி ரூபாய் இழப்பு
இந்த புரளிகளால் விமானத்தைத் தரையிறக்குவதற்கான எரிபொருள் செலவு, விமான நிலையக் கட்டணம், பயணிகளுக்கான இழப்பீடு என ஒவ்வொரு முறையும் சுமார் ரூ.3 கோடி வரை இழப்பு ஏற்படுவதாக தகவல் வெளியாகியுள்ளது.
இந்நிலையில், இவ்வாறான மிரட்டல்களை கட்டுப்படுத்தும் விதமாக, சிவில் விமான போக்குவரத்து பாதுகாப்புச் சட்டத்தில் சில திருத்தங்களை மேற்கொள்ள மத்திய அரசுக்கு விமான போக்குவரத்து அமைச்சகம் கோரிக்கை வைத்துள்ளது.
மேலும், வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டு அது புரளி எனத் தெரியவந்தால் சம்பந்தப்பட்ட நபருக்கு ஆயுள் தண்டனை மற்றும் அபராதம் விதிக்கும் வகையில், சட்டத்தில் திருத்தம் வேண்டும் எனவும் பரிந்துரைக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.