தண்டனையை கேட்டதும்.. கொல்லாமல் விடமாட்டோம் - ரத்தம் சொட்ட நீதிபதிக்கு கொலை மிரட்டல்
நீதிபதிக்கு கொலை மிரட்டல் விடுத்த சம்பவம் மதுரையில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கொலை மிரட்டல்
மதுரை வில்லாபுரம் பகுதியில் 25 கிலோ கஞ்சாவுடன் முரட்டம்பத்திரியைச் சேர்ந்த சகோதரர்கள் பாண்டியராஜன் (23), ஜாக்கி என்ற பிரசாந்த் (22) மற்றும் பாண்டியராஜனின் மனைவி சரண்யா (20) ஆகியோரை போலீஸார் கைது செய்தனர்.
தொடர்ந்து இந்த வழக்கில் போலீஸ் தரப்பில் அரசு வழக்கறிஞர் விஜயபாண்டியன் வாதிட்டார். இந்த வழக்கில் மூவருக்கும் 12 ஆண்டுகள் சிறைத் தண்டனை மற்றும் தலா ரூ.1 லட்சம் அபராதம் விதித்து நீதிபதி ஹரிஹரகுமார் தீர்ப்பளித்தார்.
நீதிமன்றத்தில் பரபரப்பு
இந்த தீர்ப்பை கேட்டதும் ஆத்திரமடைந்த பாண்டியராஜனும், ஜாக்கியும் நீதிமன்றக் கண்ணாடிகளை கைகளால் அடித்து உடைத்ததில், இருவரின் கைகளிலும் ரத்தம் வழிந்தது. அப்போது நீதிபதியின் பெயரைக் குறிப்பிட்டு,
"நாங்கள் ரவுடி வெள்ளைக்காளி மற்றும் சமீபத்தில் என்கவுன்ட்டரில் கொல்லப்பட்ட சந்திரபோஸின் கூட்டாளிகள். சந்திரபோஸை ஏன் என்கவுன்ட்டர் செய்தீர்கள்? சிறைக்குப் போய்விட்டு வெளியே வருவோம். அப்போது என்ன நடக்கிறது என்று பாருங்கள்" என கொலை மிரட்டல் விடுத்தனர்.
இதனையடுத்து நீதிபதிக்கு கொலை மிரட்டல் விடுத்தது, நீதிமன்றத்தில் கலவரம் செய்தது தொடர்பாக இருவர் மீதும் மதுரை அண்ணா நகர் போலீஸார் வழக்குப் பதிவு செய்துள்ளனர். இச்சம்பவம் நீதிமன்ற வளாகத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.