என் மனைவியை.. மனிதர்களாக நடந்து கொள்ளுங்கள் - இந்திய ரசிகர்களால் வேதனையில் ஷம்சி!
இந்திய ரசிகர்களின் செயல் குறித்து தென்னாப்பிரிக்க வீரர் தப்ரைஸ் ஷம்சி வேதனை தெரிவித்துள்ளார்.
தப்ரைஸ் ஷம்சி
கடந்த சில வாரங்களுக்கு முன்னர் இந்தியா-தென்னாப்பிரிக்கா இடையேயான டி 20 தொடர் நடைபெற்றது. அதில் இரண்டாவது போட்டியின்போது இந்திய வீரர் சூரியகுமார் யாதவ் விக்கெட்டை தப்ரைஸ் ஷம்சி வீழ்த்தினார்.
அப்போது தனது ஷூவை கையில் எடுத்து, தொலைப்பேசி போல காதில் வைத்து விக்கெட் வீழ்த்தியதை கொண்டாடினார். ஷம்சியின் அந்த செயலை அவமரியாதையாக கருதிய இந்திய ரசிகர்கள், சமூக வலைத்தளங்களில் அவரை கடுமையாக திட்டி தீர்த்து பதிவுகளை வெளியிட்டனர்.
அவரின் மனைவியையும் இந்திய ரசிகர்கள் வசைபாடியுள்ளனர். ஆனால் இதற்கு முன்பும் ஷம்சி இதுபோன்ற கொண்டாட்டத்தில் ஈடுபட்டுள்ளார்.
வருத்தம்
களத்தில் இருக்கும் அம்பயர், மூன்றாவது அம்பயரிடம் இது அவுட் தானா என வாக்கிடாக்கியில் கேட்பதை தான் இப்படி ஷூவை வைத்து செய்வதாக ஷம்சி விளக்கமும் அளித்துள்ளார்.
இந்நிலையில் இந்திய ரசிகர்களின் இந்த செயல் குறித்து வருத்தத்துடன் பேசிய ஷம்சி "நான் செய்ததை சிலர் அவமரியாதை என்பதாக எடுத்துக் கொண்டார்கள். என் மனைவியையும் திட்டினார்கள். அதை நான் விரும்பவில்லை.
சில சமயம் வீரர்களை கேலி, கிண்டல் செய்யலாம் என்பதை நான் ஏற்றுக் கொள்கிறேன். ஆனால், அவர்கள் குடும்பத்தினரை பற்றியும் மோசமாக பேசுவதை ஏற்க முடியாது. மனிதர்களாக நடந்து கொள்ள வேண்டும். மிருகம் போல நடந்து கொள்ளக் கூடாது" என்றார்.