சிறப்பாக செயல்படவில்லை; தோனிக்கு சென்னை ரசிகர்கள் கொடுத்த சத்தம்.. - ஷர்துல் தாக்கூர்!
இறுதிப்போட்டியில் நான் சிறப்பாக செயல்படாதபோதும் சென்னை அணி நிர்வாகம் என்னை ஆதரித்ததது என்று இந்திய வீரர் ஷர்துல் தாக்கூர் தெரிவித்துள்ளார்.
ஷர்துல் தாக்கூர்
இந்தியாவில் நடத்தப்படும் ஐபிஎல் கிரிக்கெட் தொடரின் 17வது சீசன் அடுத்த ஆண்டு நடைபெறவுள்ளது. இதற்கான வீரர்கள் ஏலம் துபாயில் நடைபெற்றது. இதில் இந்திய வீரர் ஷர்துல் தாக்கூரை, ரூ.4 கோடிக்கு சென்னை சூப்பர் கிங்ஸ் அணி வாங்கியது.
இவர் சென்னை அணிக்காக 2018 முதல் 2021 வரை ஏற்கனவே விளையாடியுள்ளார். இதனையடுத்து நடைபெற்ற ஐபிஎல் தொடர்களில் டெல்லி மற்றும் கொல்கத்தா அணிகளுக்காக விளையாடிய ஷர்துல் தாக்கூர் சுமாரான ஆட்டத்தை வெளிப்படுத்தியிருந்தார்.
சிறப்பாக செயல்படவில்லை
இந்நிலையில் மீண்டும் தன்னை சென்னை அணி வாங்கியது குறித்து ஷர்துல் தாக்கூர் கூறியதாவது "2019 ஐபிஎல் இறுதிப்போட்டியில் நான் சிறப்பாக செயல்படவில்லை. இருந்தும் சென்னை அணி நிர்வாகம் என்னை ஆதரித்ததது.
அதன் பின் 2 வருடங்கள் கழித்து அவர்களுடன் சாம்பியன் பட்டம் வெல்லும் வாய்ப்பு எனக்கு கிடைத்தது. சிஎஸ்கே அணிக்காக கோப்பையை வென்ற 2018, 2021 சீசன்களில் அதிக விக்கெட்கள் வீழ்த்திய பவுலராக நான் இருந்தேன்.
அதை இந்தமுறை மீண்டும் செய்ய முயல்வேன். சென்னையில் ரசிகர்களின் ஆரவாரம் அபாரமாக இருக்கும். குறிப்பாக தோனிக்காக அவர்கள் கொடுத்த ஆரவாரம் என்னுடைய வாழ்வில் நான் கேட்ட சத்தமான ஒன்றாகும்" என்று தெரிவித்துள்ளார்.