விமானம் கவிழ்ந்து விபத்து - பயணிகளுக்கு தலா ரூ.26 லட்சம் இழப்பீடு!
விமான விபத்துக்குள்ளான பயணிகளுக்கு தலா ரூ.26 லட்சம் இழப்பீடு அறிவிக்கப்பட்டுள்ளது.
விமான விபத்து
அமெரிக்கா, மினியாபோலிஸ் நகரிலிருந்து டெல்டா ஏர்லைன்ஸ் விமானம் கனடாவின் டொரண்டோவிற்கு புறப்பட்டது. சிஆர்ஜே-900 என்ற இந்த விமானத்தில் 4 பணியாளர்கள் உள்பட 80 பயணிகள் பயணித்தனர்.

விமானம் டொரன்டோ விமான நிலையத்தில் தரையிறங்கிய போது திடீரென கட்டுப்பாட்டை இழந்து விபத்துக்குள்ளானது. இதனால் விமானம் கவிழ்ந்தது. இந்த விபத்தில், 20 பயணிகள் காயமடைந்தனர். 3 பேர் படுகாயமடைந்த நிலையில், மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
26 லட்சம் இழப்பீடு
இந்நிலையில், விபத்து நடைபெற்றபோது சி.ஆர்.ஜே-900 எல்.ஆர். விமானத்தில் இருந்த பயணிகள் அனைவருக்கும் தலா ரூ.26 லட்சம் இழப்பீடு வழங்குவதாக டெல்டா ஏர்லைன்ஸ் நிறுவனம் அறிவித்துள்ளது.

தொடர்ந்து முதற்கட்ட விசாரணையில், பனிப்புயல் வீசியதால் விமானம் கட்டுப்பாட்டை இழந்து இருக்கலாம் என்று தகவல்கள் தெரிவிக்கப்பட்டுள்ளன.
தற்போது விபத்துக்குள்ளான விமானத்தை அங்கிருந்து அப்புறப்படுத்தி ஓடுபாதையை மீண்டும் செயல்பாட்டுக்கு கொண்டு வரும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது.
 
                     
                                                 
         
     
     
     
     
     
     
     
     
     
     
     
     
     
     
    