முட்ட வந்த மாடு.. பயந்து பேருந்து சக்கரத்தில் சிக்கிய நபர் - உயிரிழந்த சோகம்!
ஒருவர் மாட்டிற்கு பயந்து பேருந்தில் சிக்கி பலியானது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கால்நடைகள்
தமிழகத்தில் சாலைகளில் சுற்றித்திரியும் மாடுகளால் விபத்துகள் அதிகரித்து வருகிறது. குறிப்பாக நாகை மாவட்டத்தில், நகராட்சி நிர்வாகத்தின் அலட்சியம் காரணமாக புதிய பேருந்து நிலையம், பழைய பேருந்துநிலையம், கோட்டைவாசல் படி, பப்ளிக் ஆபீஸ்ரோடு, நாகை - நாகூர் தேசிய நெடுஞ்சாலை, மாவட்ட ஆட்சியர் அலுவலகம் என முக்கிய பகுதிகளில் சுற்றித்திரியும் மாடுகளால் வாகன ஓட்டிகள் அவதி அடைந்து வருகின்றனர்.
சாலையின் நடுவே படுத்துக் கொள்வதாலும், குறுக்கே சுற்றித் திரிவதாலும் போக்குவரத்து நெரிசலும், சாலையின் நடுவே நின்று மாடுகள் சண்டையிட்டுக் கொள்ளும் போது விபத்துகளும் அடிக்கடி நடந்து வருகிறது.
விபத்து
நாகப்பட்டினம் மாவட்டம், மேல கோட்டவாசல் பகுதியைச் சேர்ந்தவர் 55 வயதான சபரிராஜன், தொழிலாளி. இவர் அதே பகுதியில் உள்ள பெட்ரோல் பங்க் அருகே உள்ள சாலையில் நடந்து சென்றுள்ளார். அப்பொழுது அந்த வழியாக வந்த மாடு ஒன்று அவரை முட்ட வந்தது, அதில் பயந்து தடுமாறிய அந்த நபர் அருகில் வந்துக்கொண்டிருந்த அரசு பேருந்து சக்கரத்தில் சிக்கி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.
இது குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மேலும், சம்பவ இடத்தில் பொருத்தப்பட்டிருந்த கண்காணிப்பு கேமராவில் பதிவாகி இருந்த வீடியோ வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.