தொடர்ந்து சம்பவம் செய்யும் மாடுகள்.. முதியவரை முட்டித் தூக்கியதில் படுகாயம் - அச்சத்தில் மக்கள்!
முதியவர் ஒருவரை மாடு முட்டி தூக்கிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
மாடு முட்டிய சம்பவம்
சென்னை திருவல்லிக்கேணி டி.பி.கோவில் தெருவைச் சேர்ந்தவர் கஸ்தூரி ரங்கன் 65 வயதான இவர் நேற்று முன்தினம் இரவு அந்த பகுதி வழியாக சாலையில் நடந்து சென்றார். அந்த சமயத்தில் அவரது பின்னல் வந்த மாடு ஒன்று அவரை முட்டி தூக்கியது.
இதில் அவரது தலையின் பின்பக்கம் பலத்த காயம் ஏற்பட்டது, உடனே அங்கிருந்தவர்கள் மாட்டை விரட்டிவிட்டு, அந்த முதியவரை மீட்டு அருகில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர்.
இந்த சம்பவம் குறித்து ஐஸ்அவுஸ் போலீசார் வழக்குபதிவு செய்து அந்த மாட்டின் உரிமையாளரை பிடிக்க அப்பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமரா காட்சிகளை ஆய்வு செய்து வருகின்றனர்.
அதிரடி நடவடிக்கை
இந்நிலையில், சென்னை மாநகராட்சி கமிஷனர் டாக்டர் ஜெ.ராதாகிருஷ்ணன் மற்றும் அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்றனர். அங்கே சாலையில் சுற்றித்திரிந்த மாடுகளை பிடிக்க உத்தரவிட்டனர். அதன்படி நேற்று ஒரே நாளில் 16 மாடுகளை மாநகராட்சி ஊழியர்கள் பிடித்தனர்.
இது குறித்த ராதாகிருஷ்ணன் கூறுகையில், "தெருவில் திரியும் மாடுகள் பிளாஸ்டிக், தெருவில் உள்ள தண்ணீர் ஆகியவற்றை அருந்துகிறது. மாடு உரிமையாளர்கள் இவ்வாறு பராமரிப்பது தவறு.
மாடு வளர்ப்போரின் வாழ்வாதாரத்தை பாதிக்க வேண்டும் என்பது எங்கள் எண்ணமல்ல. மாடுகளால் ஏற்படும் விபத்துகளை உரிமையாளர்கள் சாதாரண நிகழ்வாக எடுத்து கொள்ளக்கூடாது" என்று கூறியுள்ளார்.