ஒரே மாதத்தில் 20 மாரடைப்பு மரணங்கள்; கோவிட் தடுப்பூசி காரணமா? அரசு விளக்கம்
ஒரே மாதத்தில் 20க்கும் மேற்பட்டோர் திடீர் மாரடைப்பால் உயிரிழந்தனர்.
திடீர் மாரடைப்பு
கர்நாடகா, ஹாசன் மாவட்டத்தில் கடந்த ஒரு மாதத்தில் மட்டும் 20-க்கும் மேற்பட்டோர் மாரடைப்பு ஏற்பட்டு உயிரிழந்தனர். இதில், இணை நோய் எதுவுமின்றி இளம் வயதினோர் உயிரிழந்தது அதிர்ச்சியையும், அச்சத்தையும் ஏற்படுத்தியது.
தொடர்ந்து இது தொடர்பாக அறிக்கை வெளியிட்ட அம்மாநில முதலமைச்சர் சித்தராமையா, திடீர் மாரடைப்புகளுக்கு கொரோனா தடுப்பூசி காரணமாக இருக்கலாம் என்ற சந்தேகத்தை புறக்கணிக்க முடியாது. திடீர் உயிரிழப்புகளுக்கான உண்மையான காரணங்களை கண்டறிய மருத்துவர் கே.எஸ். ரவீந்திரநாத் தலைமையில் குழு அமைக்கப்பட்டுள்ளதாக குறிப்பிட்டார்.
இந்நிலையில், கடந்த 2023 ஆம் ஆண்டு, 19 மாநிலங்களில், 18 முதல் 45 வயதுக்கு இடைப்பட்டோர் திடீரென்று உயிரிழந்தவர்கள் குறித்து இந்திய மருத்துவ கவுன்சில் மற்றும் தேசிய நோய் தடுப்பு அமைப்பு இணைந்து, ஆய்வு மேற்கொண்டது. அதில், திடீர் உயிரிழப்புகளுக்கும் கொரோனா தடுப்பூசிக்கும் எந்த தொடர்பும் இல்லை என்பது தெளிவானது.
அரசு விளக்கம்
இந்திய மருத்துவ கவுன்சிலுடன் இணைந்து டெல்லி எய்ம்ஸ் மேற்கொண்ட ஆய்வில், இளம் வயதில் ஏற்படும் திடீர் உயிரிழப்புகளுக்கு மாரடைப்பு காரணம் என்பது தெரியவந்துள்ளது. ஆனால், அதற்கு மரபணு மாற்றங்களே முக்கிய காரணமாக இருக்கலாம் என்று கண்டறியப்பட்ட நிலையில், ஆய்வின் இறுதி முடிவு வெளியானதும் பொதுவெளியில் சமர்ப்பிக்கப்படும்.
இவ்விரு ஆய்வுகளின் அடிப்படையிலும் இளம் வயதில் ஏற்படும் திடீர் உயிரிழப்புகளுக்கும் கொரோனா தடுப்பூசிகளுக்கும் தொடர்பு இல்லை. மரபுணு, வாழ்வியல் மாற்றங்கள், உடனடியாக வெளியே தெரியாத உடல்நலம் சார்ந்த பிரச்னைகளால் திடீர் இறப்புகள் ஏற்படுவதற்கான சாத்தியக்கூறுகள் அதிகம்.
எனவே, திடீர் மரணங்களுக்கு எவ்வித அடிப்படை ஆதாரமும் இன்றி கொரோனா தடுப்பூசி மீது குற்றம் சுமத்துவது, நாட்டின் சுகாதாரத்துறை மீதான நம்பகத்தன்மையை கெடுக்கும் செயல் என்று மத்திய அரசு விளக்கம் அளித்துள்ளது.