ஈத்கா மைதானத்தில் விநாயகர் சதுர்த்தி - அனுமதி மறுத்த உச்ச நீதிமன்றம்!
ஈத்கா மைதானத்தில் விநாயகர் சதுர்த்தி விழா கொண்டாட உச்ச நீதிமன்றம் மறுப்பு தெரிவித்துள்ளது.
விநாயகர் சதுர்த்தி
தார்வார் மாவட்டம் உப்பள்ளி டவுன் கித்தூர் ராணி சென்னம்மா சர்க்கிள் அருகே ஈத்கா மைதானம் உள்ளது. இந்த மைதானத்தில் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு விநாயகர் சதுர்த்தி விழா கொண்டாடப்பட்டுள்ளது.

இதற்கு முஸ்லிம் அமைப்பினர் ஈத்கா மைதானம் தங்களுக்குரியது என்று போராட்டம் நடத்தி ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்ததாக கூறப்படுகிறது. இதையடுத்து சுதந்திர தினத்தின்போது பலத்த போலீஸ் பாதுகாப்புடன் முதல் முறையாக அங்கு தேசியக் கொடி ஏற்றப்பட்டது.
ஈத்கா மைதானம்
இந்நிலையில், விஷ்வ ஹிந்து பரிஷத் அமைப்பினர் ஈத்கா மைதானத்தில் விநாயகர் சதுர்த்தி பந்தல் வைக்கப்போவதாக அறிவித்தனர். இதற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்த எஸ்டிபிஐ கட்சியினர், அதனைக் கண்டித்து போராட்டம் நடத்தப்போவதாகவும் தெரிவித்ததால் போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டது.

இதனிடையே ஈத்கா மைதானத்தில் விநாயகர் சதுர்த்தி கொண்டாட கர்நாடக அரசு அனுமதி வழங்கியது. இதை எதிர்த்து கர்நாடக வக்பு வாரியம். கர்நாடக உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்தது. அதை விசாரித்த உயர் நீதிமன்றம், விநாயகர் சதுர்த்தி கொண்டாட தடை விதிக்க முடியாது என தெரிவித்தது.
அனுமதி ரத்து
இதை எதிர்த்து கர்நாடக வக்பு வாரியம் உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தது. இந்த மனு நீதிபதிகள் இந்திரா பானர்ஜி, ஏ.எஸ். ஓகா, எம்.எம். சுந்தரேஷ் ஆகியோர் அடங்கிய அமர்வு முன்னிலையில் நேற்று விசாரணைக்கு வந்தது.
இருதரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதிகள், ஈத்கா மைதானத்தில் விநாயகர் சதுர்த்தி கொண்டாட வழங்கப்பட்ட அனுமதி ரத்து செய்யப்படுவதாக தெரிவித்தனர்.