சிக்கலில் கவுதம் கம்பீர் - மோசடி வழக்கில் அதிரடி உத்தரவிட்ட நீதிமன்றம்
கவுதம் கம்பீர்க்கு எதிரான மோசடி வழக்கை மறு விசாரணை செய்ய நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
கவுதம் கம்பீர்
முன்னாள் கிரிக்கெட் வீரர் கவுதம் கம்பீர், இந்திய இந்திய கிரிக்கெட் அணியின் தலைமை பயிற்சியாளராக செயல்பட்டு வருகிறார்.
இவர் உத்திரபிரதேச மாநிலம் காசியாபாத்தை சேர்ந்த தனியார் கட்டுமான நிறுவனம் ஒன்றின் விளம்பர தூதராகவும் செயல்பட்டார்.
விளம்பர தூதர்
2011 ஆம் ஆண்டு காஜியாபாத்தில் உள்ள இந்திரபுரத்தில் வரவிருக்கும் வீட்டுத் திட்டத்தை ‘செர்ரா பெல்லா’ என்று விளம்பரம் செய்துள்ளார். இது 2013 இல் ‘பாவோ ரியல்’ என மறுபெயரிடப்பட்டது. இந்த விளம்பரங்களால் கவரப்பட்ட பலரும் ரூ. 6 லட்சம் முதல் ரூ.16 லட்சம் வரை செலுத்தி பிளாட்களை முன்பதிவு செய்துள்ளனர்.
ஆனால் 2016 வரை இந்த திட்டத்தில் எந்த கட்டுமானமும் மேற்கொள்ளப்படவில்லை என முதலீடு செய்தவர்கள் நீதிமன்றத்தை நாடினர். இந்த வழக்கை விசாரித்த மாஜிஸ்திரேட் நீதிமன்றம் கவுதம் கம்பீரை வழக்கில் இருந்து விடுவித்து உத்தரவிட்டது. இந்த உத்தரவை எதிர்த்து மனுதாரர்கள் டெல்லி நீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்தனர்.
மீண்டும் விசாரணை
மேல் முறையீட்டு மனுவை விசாரித்த டெல்லி நீதிமன்றம், மாஜிஸ்திரேட் நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவை ரத்து செய்ததோடு வழக்கை மீண்டும் விசாரிக்க உத்தரவிட்டுள்ளது. கம்பீர் விளம்பர தூதராக செயல்பட்டது மட்டுமல்லாமல், நிறுவனத்தின் இயக்குநர் பொறுப்பிலும் இருந்துள்ளார்.
மேலும் அவர் அந்த நிறுவனத்திற்கு ரூ.6 கோடி செலுத்தியதையும், நிறுவனத்திடமிருந்து ரூ.4.85 கோடி பெற்றதையும் குற்றப்பத்திரிகையில் குறிப்பிடவில்லை.
பிராண்டு தூதராக, முதலீட்டாளர்களுடன் நேரடி தொடர்பு வைத்திருந்த ஒரே குற்றம் சாட்டப்பட்டவர் கவுதம் கம்பீர் என குறிப்பிட்ட நீதிபதிகள், குற்றம் சாட்டப்பட்ட ஒவ்வொருவருக்கும் எதிரான குற்றச்சாட்டுகளைக் குறிப்பிடும் வகையில் விரிவான புதிய உத்தரவை பிறப்பிக்க உத்தரவிட்டுள்ளனர்.