கெடு விதித்த உச்ச நீதிமன்றம் - கொல்கத்தா பயிற்சி மருத்துவர்கள் அதிரடி!
உச்ச நீதிமன்றம் மருத்துவர்கள் போராட்டத்தை நிறுத்திவிட்டு பணிக்கு திரும்புமாறு கெடு விதித்துள்ளது.
மருத்துவர்கள் போராட்டம்
கொல்கத்தாவில் உள்ள ஆர்.ஜி.கர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் பணியில் இருந்த பெண் பயிற்சி மருத்துவர் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொலை செய்யப்பட்டார்.
இச்சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. இதனைத் தொடர்ந்து பெண் டாக்டர் கொலையை கண்டித்தும், மருத்துவ பணியாளர்களின் பாதுகாப்பை உறுதி செய்யக்கோரியும் மேற்குவங்கத்தில் ஒரு மாதத்துக்கும் மேலாக மருத்துவர்கள் வேலை நிறுத்தம் உள்ளிட்ட போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர்.
இதனால், நோயாளிகள் மிகுந்த பாதிப்புக்குள்ளாகியுள்ளனர். மேலும், அரசு தரப்பில் தாக்கல் செய்யப்பட்டுள்ள அறிக்கையில், மருத்துவர்களின் வேலை நிறுத்தத்தால் மாநிலத்தில் 23 நோயாளிகள் உயிரிழந்திருப்பதாக கூறப்பட்டுள்ளது. எனவே, வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ள மருத்துவர்கள் இன்று மாலை 5 மணிக்குள் பணிக்கு திரும்ப வேண்டும்.
உச்ச நீதிமன்றம் கெடு
இளநிலை மருத்துவர்கள் உடனடியாக பணிக்கு திரும்பி நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்க வேண்டும். அவர்கள் மீண்டும் பணியைத் தொடங்கினால் எந்தவிதமான பாதகமான நடவடிக்கையும் இருக்காது. தவறினால் நடவடிக்கை ஏற்பட வாய்ப்புள்ளதாக உச்சநீதிமன்றம் உத்தரவு பிறப்பித்தது.
இந்நிலையில், இந்த போராட்டம் என்பது மக்கள் இயக்கம். இதை மாநில அரசோ, உச்ச நீதிமன்றமோ மறக்க கூடாது. எங்களுக்கு நீதி கிடைக்கும் வரை போராட்டம் தொடரும். உயர் நீதிமன்றத்தில் இருந்து உச்ச நீதிமன்றத்திற்கு வழக்கு சென்றுள்ளது.
மாநில போலீசிடம் இருந்து சிபிஐக்கு விசாரணை சென்றுள்ளது. ஆனால், நீதி என்பது இன்னும் கிடைக்கவில்லை. சுகாதார அமைப்பை சீர்குலைந்துள்ளதாக மாநில அரசு கூறியது தவறானது என பயிற்சி மருத்துவர்கள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.