உயிரிழந்த 7 வயது மகன்.. தாய்,தந்தை எடுத்த விபரீத முடிவு - நெஞ்சை உலுக்கும் கொடூரம்!
வைரஸ் காய்ச்சலால் மகன் உயிரிழந்த சோகத்தில் பெற்றோர் தற்கொலை செய்து கொண்டுள்ளனர்.
உயிரிழந்த மகன்
கோயம்புத்தூர் மாவட்டம் காட்டூர் காவல்நிலையத்திற்குட்பட்ட பகுதியைச் சேர்ந்தவர் பழனிசாமி - வக்சலா தம்பதியினர். இவர்களுக்கு 7 வயதில் விஷ்ணு என்ற மகன் உள்ளார்.
இந்த நிலையில் கடந்த சில தினங்களுக்கு முன் விஷ்ணுவிற்கு உடல்நிலை பாதிக்கப்பட்டதால் மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர்.அங்குச் சிறுவனைப் பரிசோதித்த மருத்துவர்கள் வைரஸ் காய்ச்சல் இருப்பதாகத் தெரிவித்தனர். இதனையடுத்து விஷ்ணுவுக்குச் சிகிச்சை அளிக்கப்பட்டது.
ஆனால் சிறுவன் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார். இதனால் பழனிசாமி - வக்சலா தம்பதி மன உளைச்சலிலிருந்ததாக தெரிகிறது.இந்த சுழலில் அந்த பகுதியில் உள்ள ஒரு விடுதி அறையில் கணவன் மனைவி இருவரும் திடீரென தற்கொலை செய்து கொண்டுள்ளனர்.
தற்கொலை
இதனை கண்டு அதிர்ச்சியடைந்த அக்கம் பக்கத்தினர் காட்டூர் காவல்துறையினருக்குத் தகவல் தெரிவித்தனர்.தகவலின் அடிப்படையில் சம்பவ இடத்திற்கு வந்த காவல்துறையினர் உடலைக் கைப்பற்றி பிரேதப் பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.
மேலும் இந்த சம்பவம் குறித்து வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். மகன் உயிர் இழந்த சோகத்தில் பெற்றோரும் தற்கொலை செய்து கொண்டு உயிரிழந்தது பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.