சொகுசு வாழ்க்கை... குறிவைத்து கொள்ளையடித்த இன்ஸ்டா ஜோடி - நையப்புடைத்த பொதுமக்கள்!

Tamil nadu Coimbatore Crime
By Sumathi Aug 13, 2022 01:33 PM GMT
Report

முதியவரை கட்டிப்போட்டு கொள்ளையடிக்க முயன்ற காதல் ஜோடியை கையும், களவுமாக பொதுமக்கள் பிடித்துள்ளனர்.

முதியவரை மடக்கி கொள்ளை

கோவை வடவள்ளி அருகே உள்ள பொம்மணாம்பாளையம் மாரியம்மன் ‌கோவில் வீதியில் குடியிருப்பவர் பெரிய ராயப்பன் (76). இவரது மனைவி ராஜம்மாள் (67).வயதானவர்கள் இருவரும் வீட்டில் தனியாக வசித்து வந்துள்ளனர். இந்த நிலையில் ராஜம்மாள் மருத்துவமனைக்கு சென்றுள்ளார்.

சொகுசு வாழ்க்கை... குறிவைத்து கொள்ளையடித்த இன்ஸ்டா ஜோடி - நையப்புடைத்த பொதுமக்கள்! | Couple Arrested For Robbing An In Coimbatore

இதனிடையே ஆண், பெண் இருவர் வந்து வீட்டில் தனியாக வெளியில் அமர்ந்து இருந்த பெரிய ராயப்பனிடம் தண்ணீர் கேட்டு உள்ளனர். தண்ணீர் எடுத்து வர உள்ளே சென்ற முதியவரை பின் தொடர்ந்து வீட்டிற்குள் சென்ற இருவரும் அவரை மடக்கி பிடித்து இரு கைகளையும் கட்டி, வாயில் பிளாஸ்டரை சுற்றி சமையல் அறையில் தள்ளி விட்டு உள்ளனர்.

 முரணான பதில்

அதனைத் தொடர்ந்து வீட்டில் இருந்த பீரோ மற்றும் பல இடங்களில் பணம், நகைகளை தேடியுள்ளனர். பின்னர் இரண்டே கால் பவுண் தங்க நகைகள் மற்றும் ஆயிரத்து 500 ரூபாய் பணம் ஆகியவற்றை கொள்ளை அடித்து விட்டு வீட்டின் பின் கதவு வழியாக வெளியேறி உள்ளனர்.

சொகுசு வாழ்க்கை... குறிவைத்து கொள்ளையடித்த இன்ஸ்டா ஜோடி - நையப்புடைத்த பொதுமக்கள்! | Couple Arrested For Robbing An In Coimbatore

அப்போது முதியவரின் மகன் பாபு சென்னையில் இருந்து வீட்டிற்கு வந்துள்ளார். வீட்டின் பின்பகுதியில் இருந்து இருவர் சந்தேகிக்கும் வகையில் வருவதை பார்த்துள்ளார். அவர்களிடம் நீங்கள் யார் என்று கேட்ட பொழுது, முன்னுக்கு பின் முரணாக பதில் அளித்து அங்கிருந்து நழுவி தப்பியோட முற்பட்டுள்ளனர்.

வளைத்து பிடித்த பொதுமக்கள்

அவர்கள் மீது சந்தேகம் அடைந்த அவர் இருவரையும் பிடிக்க முற்பட்டுள்ளார். அவரை தள்ளிவிட்டு இருவரும் அங்கிருந்து தப்பியோடியுள்ளனர். இதையடுத்து பாபு அக்கம் பக்கத்தினரை உதவிக்கு அழைத்துள்ளார். உடனடியாக அங்கு திரண்ட அக்கம் பக்கத்தினர் ஒன்று சேர்ந்து இருவரையும் விரட்டி உள்ளனர்.

ஒரு புதரில் பதுக்கிய பெண்ணை லாவகமாக மடக்கிப் பிடித்தனர். தன்னுடன் வந்த பெண் பிடிபட்டதை கண்ட நபர் தானாக பொதுமக்களிடம் வந்து சேர்ந்தார். இதையடுத்து இருவரையும் அடித்து உதைத்த பொதுமக்கள் இருவரது கைகளை கயிற்றால் கட்டி வைத்தனர்.

  இன்ஸ்டா ஜோடி

பின்னர் தகவல் கொடுக்கப்பட்டு போலீஸார் விரைந்து வந்து விசாரணையில் ஈடுபட்டனர். விசாரணையில் அந்தப் பெண் திருச்சியை சேர்ந்த சென்பகவள்ளி (24), எம்.பி.ஏ பட்டதாரியான இவர் சிங்காநல்லூர் பகுதியில் வசித்து வருகிறார் என்பது தெரியவந்தது.

உடனிருந்த நபர் விருதுநகர் பகுதியை சேர்ந்த தினேஷ் (23), பி.இ. பட்டதாரியான இவர் சிங்காநல்லூர் பகுதியில் வசித்து வருவதும் தெரியவந்தது. இவர்கள் இருவரும் கடந்த ஆறு மாதங்களுக்கு முன் இன்ஸ்டாகிராம் மூலம் பழகி காதலித்து வந்துள்ளனர்.

இருவரும் உல்லாசமாக வாழவும், பல இடங்களுக்கு ஊர் சுற்றவும் திருட்டில் ஈடுபட்டது தெரியவந்தது. இவர்கள் கிராம பகுதியை தேர்வு செய்து புத்தகம் விற்பனை செய்வது போல் வீட்டில் இருக்கும் நபர்களை கண்காணித்து வந்து குறிப்பிட்ட வீடுகளில் புகுந்து கொள்ளை அடித்து வந்து உள்ளனர்.

கொள்ளை அடிக்க யூடியூப் பார்த்து அதற்கு சில கூர்மையான ஆயுதங்களான சுத்தி, கயிறு, பிளாஸ்டர் உள்ளிட்டவை கொண்டு கொள்ளை அடித்து வந்ததாக தெரியவந்துள்ளது.