வேலை நேரம் முடிந்தபின் நிறுவனம் அழைத்தால் நிராகரிக்க உரிமை - வருகிறது புதிய சட்டம்!
வேலை நேரம் முடிந்து சென்றபின் நிறுவனத்திடம் இருந்து வரும் அழைப்புகளை நிராகரிப்பதற்கான உரிமையை வழங்கும் விதமாக சட்டத்தில் திருத்தம் செய்யப்பட்டுள்ளது.
புதிய சட்டம்
பணி நேரம் முடிந்து ஊழியர்கள் வீடு திரும்பிய பிறகும், மேலதிகாரிகள் தொடர்பு கொண்டு வேலை தொடர்பான தகவல்களை கேட்பதுண்டு. இதனால் வீட்டிற்கு சென்ற பிறகும் அலுவலகம் பற்றியே சிந்திக்க வேண்டிய நிலை ஏற்பட்டு, குடும்பத்தினருடன் அமைதியாக நேரம் செலவிட முடிவதில்லை.
மேலும், வார விடுமுறை நாட்களில் கூட நிறுவனம் அழைத்தால் வேலை செய்ய வேண்டிய சூழ்நிலை ஏற்படுகிறது. இந்த குறையை போக்கும் வகையில் பிரான்ஸ், ஸ்பெயின் பெல்ஜியம் ஆகிய ஐரோப்பிய நாடுகள் புதிய சட்டம் ஒன்றை கொண்டு வந்துள்ளன.
அழைப்பை நிராகரிக்கலாம்
இந்த சட்டம் வேலை நேரம் முடிந்தபின், தொழிலாளர்களை நிறுவனம் தொடர்புகொண்டால் அழைப்பை துண்டிக்கும் உரிமையை வழங்குகிறது. இந்த நாடுகளின் வரிசையில் தற்போது ஆஸ்திரேலியாவும் இணைந்துள்ளது.
இதன் மூலம் வேலை நேரம் முடிந்து சென்றபின், நிறுவனத்திடம் இருந்து அழைப்புகள், மின்னஞ்சல்கள் வந்தால், அதை நிராகரிப்பதற்கான உரிமையை வழங்கும் விதமாக சட்டத்தில் திருத்தம் செய்யப்பட்டுள்ளது. மேலும், தொழிலாளர்களை தொடர்புகொள்ளும்போது, நியாயமற்ற காரணமாக இருந்தால் அந்த அழைப்பை நிராகரிக்கலாம்.
நியாயமான காரணமாக இருந்தால் அழைப்புக்கு பதில் அளிக்கலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த புதிய சட்டத்திருத்தம் ஓரிரு நாட்களில் நிறைவேற்றப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.