70 ஆண்டுகளுக்கு பின் முடிசூடிய மன்னர் 3-ம் சார்லஸ் - விழாக்கோலம் பூண்ட லண்டன்!
மூன்றாம் சார்லஸ் மன்னரின் முடிசூட்டு விழா கோலாகலமாக நடைபெற்றது.
மூன்றாம் சார்லஸ்
இங்கிலாந்தில் ராணி 2-ம் எலிசபெத் கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் 8-ம் தேதி, தனது 96வது வயதில் மரணமடைந்தார். இதனையடுத்து இங்கிலாந்தின் புதிய மன்னராக மூன்றாம் சார்லஸ் அறிவிக்கப்பட்டார்.

தொடர்ந்து, மூன்றாம் சார்லஸுக்கான வெஸ்ட்மினிஸ்டர் அபே பகுதிக்கு தங்க சாரட் வண்டியில் அழைத்து வரப்பட்டார். அதன்பின் உறுதிமொழி ஏற்று அதிகாரப்பூர்வமாக முடி சூடினார். முதல் முறையாக வெல்ஸ் மொழியில் பாடல் ஒலித்தது.
முடிசூடல்
இந்த விழாவில், பாரம்பரிய மரபுப்படி கையில் செங்கோல், தடி ஆகியவற்றை ஏந்தி மூன்றாம் சார்லஸ் மன்னர் அரியணையில் அமர்ந்தார். இங்கிலாந்து ராணியாக கமிலா பார்க்கர் முறைப்படி அறிவிக்கப்பட்டார். இவ்விழாவில் இளவரசர் வில்லியம், அவரது மனைவி கேட், இளவரசர் ஹாரி ஆகியோர் பங்கேற்றனர். ஒவ்வொரு நாட்டை சேர்ந்த முக்கிய தலைவர்களும் பங்கேற்றனர்.

அதன் வரிசையில், இந்திய துணை ஜனாதிபதி ஜகதீப் தன்கர் தனது மனைவி சுதேஷ் தன்கருடன் பங்கேற்றார். மேலும், பாலிவுட் நடிகை சோனம் கபூரும் கலந்துக்கொண்டார். அமெரிக்காவின் ஜனாதிபதி ஜோ பைடன் வருகை தரவில்லை என்றாலும், அவரது மனைவி ஜில் பிடன் அமெரிக்காவை பிரதிநிதித்துவப்படுத்தினார்.

அதோடு உக்ரைனின் முதல் பெண்மணி ஒலெனா ஜெலென்ஸ்கா, உக்ரைன் பிரதமர் டெனிஸ் ஷ்மிஹால், பிரேசில் அதிபர் லூயிஸ் இனாசியோ லுலா டா சில்வா மற்றும் அவரது மனைவி ரோசங்கலா ஜான்ஜா டா சில்வா ஆகியோர் வருகை தந்துள்ளனர். உலக நாடுகளின் தலைவர்கள், இங்கிலாந்திலுள்ள தொண்டு நிறுவனங்கள், சமூக குழுக்களைச் சேர்ந்தவர்கள் என சுமார் 2 ஆயிரம் பேருக்கு அழைப்பு விடுக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.
