நீதிமன்ற அவமதிப்பு - அறநிலையத்துறை ஆணையருக்கு அபராதம்
நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் இந்து சமய அறநிலையத்துறை ஆணையருக்கு ரூ.1லட்சம் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.
சொத்து வழக்கு
சென்னை சூளைமேடு சொக்கவேல் சுப்ரமணியர் கோவிலுக்கு சொந்தமான சொத்துக்களை குத்தகைக்கு எடுத்த தனிநபர்கள் நீண்ட நாட்களாக வாடகை வரி செலுத்தாமல் இருப்பதாக, சூளையைச் சேர்ந்த சுகுமாறன் என்பவர் வழக்கு தொடர்ந்திருந்தார்.
இந்த வழக்கு விசாரணையின் போது, தனிநபர்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அறநிலைத்துறை சார்பில் விளக்கம் அளிக்கப்பட்டது. இதன் அடிப்படையில், நீதிபதி 2021 ஆம் ஆண்டு இந்த நடவடிக்கையை விரைந்து செயல்படுத்த உத்தரவு பிறப்பித்திருந்தார்.
நீதிமன்ற அவமதிப்பு
ஆனால் இந்த உத்தரவை செயல்படுத்தவில்லை என சுகுமாறன் நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடர்ந்தார். இதற்கு அறநிலையத்துறை உதவி ஆணையர், கோவில் சொத்து வழக்கில் விரைந்து நடவடிக்கை எடுத்து வருவதாகவும், நீதிமன்றத்தை அவமதிக்கும் எண்ணம் எதுவும் இல்லை எனவும் விளக்கமளித்தார்.
இந்த வழக்கை விசாரித்த நீதிபதி அனிதா சுமந்த், நீதிமன்ற உத்தரவை அமல்படுத்த ஏற்பட்ட காலதாமதத்திற்கான காரணத்தை உதவி ஆணையர் கூறவில்லை எனவும், மேலும் இதற்கு வருத்தம் தெரிவிக்காத நடையும் ஏற்றுக்கொள்ள முடியாது எனவும் கூறி இந்து அறநிலையத்துறை ஆணையருக்கு ரூ.1லட்சம் அபராதம்,
உதவி மற்றும் இணை ஆணையருக்கு தலா 50,000ஆயிரம் அபராதம் விதித்தும் உத்தரவி பிறப்பித்தார். இந்த அபராதத் தொகையை சென்னை, அடையாறு புற்றுநோய் மருத்துவமனைக்கு இரண்டு வாரங்களில் வழங்க வேண்டும் எனவும் நீதிபதி தனது உத்தரவில் தெரிவித்துள்ளார்.