எதற்கு ஆளுநருக்கு மாளிகை? அந்த சாலையில் இடம் கொடுங்க - காங்கிரஸ் கோரிக்கை!
ஆளுநர் ஆர்.என்.ரவிக்கு பசுமை வழிச் சாலையில் இடம் கொடுங்கள் என செல்வப்பெருந்தகை கோரிக்கை விடுத்துள்ளார்.
கண்டன ஆர்ப்பாட்டம்
மகாத்மா காந்தியை இழிவுபடுத்தி பேசிய தமிழக ஆளுநர் ஆர்.என். ரவியை கண்டித்து, தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ்.அழகிரி தலைமையில் சென்னை சைதாப்பேட்டை, பனகல் மாளிகை அருகில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைப்பெற்றது.
இதில், பேசிய காங்கிரஸ் கட்சியின் சட்டமன்ற குழு தலைவர் செல்வப்பெருந்தகை, "முதல்வர் ஸ்டாலினுக்கு ஒரு வேண்டுகோள், ஆங்கிலேயர்கள் தான் ஆளுநர் மாளிகையில் தங்கி இருந்தனர். ஆர்.என்.ரவி ஏன் ஆளுநர் மாளிகையில் தங்க வேண்டும்?
கொந்தளித்த எம்எல்ஏ
அவருக்கு பசுமை வழிச் சாலையில் இடம் கொடுங்கள். ஆளுநருக்கு முதலில் வரலாறு தெரியாது, ரவிக்கு ஒரு மார்க் கூட போட முடியாது. அவர் படித்தாரா இல்லை என்று தெரியவில்லை. எந்த ஒரு தகுதியும் இல்லாதவர் ஆளுநர். ஒரு வட்ட செயலாளராக கூட இருக்க தகுதி இல்லாதவர் ஆளுநர் ரவி.
அவருக்கு ராஜ் பவன் எதற்கு? வரலாற்று திரிபுகளை தொடர்ந்து ஏற்படுத்தி கொண்டு இருக்கிறார் ஆளுநர் ரவி. தமிழ்நாடு ஆளுநர் ரவி ஜனாதிபதி உடனடியாக திரும்பப் பெற வேண்டும் இல்லை என்றால் வெகுஜன போராட்டம் வெடிக்கும் எனத் தெரிவித்துள்ளார்.
இந்த ஆர்ப்பாட்டத்தில், டாளுமன்ற உறுப்பினர்கள் செல்லக்குமார், விஜய் வசந்த், மற்றும் சட்டமன்ற உறுப்பினர் அசன் மவுலானா உள்ளிட்ட ஏராளமான நிர்வாகிகள் பங்கேற்றனர்.