NET மட்டுமா? நீட் தேர்வையும் ரத்து செய்யனும் - காங்கிரஸ் நாடு தழுவிய போராட்டம்!
நாடு முழுவதும் நாளை போராட்டம் நடைபெறும் என காங்கிரஸ் கட்சி அறிவித்துள்ளது.
நெட் தேர்வு ரத்து
உதவிப் பேராசிரியர் பணியிடங்களுக்கான யுஜிசி நெட் தேர்வு நடைபெற்ற நிலையில் முறைகேடுகள் நடந்திருக்கலாம் என்பதால் அத்தேர்வை ரத்து செய்வதாக மத்திய அரசு அறிவித்துள்ளது.
விரைவில் தேர்வு தேதி அறிவிக்கப்படும் எனவும் மத்திய கல்வி அமைச்சகம் தெரிவித்துள்ளது. இதனைத் தொடர்ந்து நீட் தேர்வையும் ரத்து செய்ய வேண்டும் என எதிர்கட்சிகள் கோரிக்கை வைத்து வருகின்றனர். இளங்கலை மருத்துவப் படிப்புகளுக்கான நீட் தேர்வு முடிவுகளை தேசிய தேர்வு முகமை ஜூன் 4-ல்வெளியிட்டது.
அதில், சில விண்ணப்பதாரர்களின் மதிப்பெண்கள் உயர்த்தி காட்டப்பட்டு முறைகேடு செய்யப்பட்டுள்ளது. இந்த தேர்வில் கருணை மதிப்பெண்கள் வழங்கப்பட்டது மாணவர்களிடையே பெரும் சந்தேகங்களை ஏற்படுத்தியுள்ளது. மேலும், பிஹார், குஜராத், ஹரியாணாவில் நடத்தப்பட்ட விசாரணையில் பலர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
காங்கிரஸ் போராட்டம்
உச்ச நீதிமன்றமும் இந்த குற்றச்சாட்டுகளின் தீவிரத்தை உணர்ந்து இத்தகை அலட்சியங்களை சகித்துக் கொள்ள முடியாது என்று கண்டித்துள்ளது. நீட் தேர்வில் நடைபெற்றுள்ள மாபெரும் ஊழல் மற்றும் முறைகேடுகளை கண்டித்தும், இந்த விவகாரத்தில் மத்திய அரசின் செயலற்ற தன்மை மற்றும்தொடர் மவுனத்துக்கு எதிர்ப்பு தெரிவித்தும்,
மாணவர்களுக்கு நீதி கோரியும் மாநில தலைமையகங்களில் நாளை மாபெரும் போராட்டத்தை நடத்த வேண்டும். அதில், முக்கிய தலைவர்கள், கட்சி நிர்வாகிகள் பங்கேற்க வேண்டும் என காங்கிரஸ் பொதுச்செயலர் கே.சி.வேணுகோபால் தெரிவித்துள்ளார்.
அனைத்து பிரதேச காங்கிரஸ் கமிட்டி தலைவர்கள், பொறுப்பாளர்கள், அனைத்து பிரிவு தலைவர்கள், அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி செயலாளர்களுக்கு இதுதொடர்பாக கடிதம் அனுப்பப்பட்டுள்ளது.