இளைஞர் காங். தலைவர் ஶ்ரீநிவாஸை தலைமுடியை பிடித்து இழுத்துச் சென்ற போலீசாரால் பரபரப்பு
காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி அமலாக்கத்துறை அலுவலகத்தில் ஆஜரானதற்கு எதிர்ப்பு தெரிவித்து நாடு முழுவதும் காங்கிரஸ் கட்சியினர் போராட்டம் நடத்திய நிலையில் இளைஞர் காங்கிரஸ் தலைவர் ஶ்ரீநிவாஸை தலைமுடியை பிடித்து இழுத்துச் சென்ற போலீசாரால் பரபரப்பு ஏற்பட்டது.

நேஷனல் ஹெரால்டு வழக்கு
நேஷனல் ஹெரால்டு வழக்கில் 2ம் கட்ட விசாரணை இன்று தொடங்கியது. இந்த விசாரணைக்காக காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி இன்று ஏ.பி.ஜே அப்துல் கலாம் சாலை அருகே உள்ள அமலாக்கத்துறை அலுவலகத்தில் ஆஜரானார். இதற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்து நாடு முழுவதும் காங்கிரஸ் கட்சியினர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறார்கள்.
ராகுல் காந்தி கைது
டெல்லியில் விஜய் சவுக் பகுதியில் ராகுல் காந்தி தலைமையில் போராட்டம் நடைபெற்றது. அப்போது, போராட்டத்தில் ஈடுபட்ட ராகுல் காந்தி, காங். எம்பிக்கள், தொண்டர்கள் குடியரசு தலைவர் மாளிகை நோக்கி பேரணியாக சென்றனர். இவர்கள் பேரணியாக வருவதைக் கண்ட போலீசார் இவர்களை தடுத்து நிறுத்தி, ராகுல் காந்தியுடன் அனைவரையும் கைது செய்து பேருந்தில் ஏற்றிச் சென்றார்கள்.
ராகுல் டுவிட்
இது குறித்து, ராகுல் காந்தி தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டார். அந்த பதிவில், "சர்வாதிகாரத்தை பாருங்கள்.
நாட்டில் அமைதியான ஆர்ப்பாட்டங்களை யாரும் நடத்த முடியாது. பணவீக்கம், வேலையின்மை பற்றி விவாதிக்க முடியாது.
காவல்துறையையும், ஏஜென்சிகளையும் தவறாகப் பயன்படுத்தி, எங்களை கைது செய்தாலும், ஒருபோதும் அமைதிப்படுத்த முடியாது. உண்மை ஒருநாள் இந்த சர்வாதிகாரத்தை முடிவுக்கு கொண்டு வரும்" என்று பதிவிட்டுள்ளார்.
தலைமுடியை பிடித்து இழுத்துச் சென்ற போலீசார்
இந்நிலையில், டெல்லியில் காங்கிரஸ் கட்சி நடத்திய போராட்டத்தின் போது இளைஞர் காங்கிரஸ் தலைவர் ஶ்ரீநிவாஸ் என்பவரை டெல்லி போலீசார் தலைமுடியை பிடித்து இழுத்துச் சென்றதால் பரபரப்பு ஏற்பட்டது.
இது குறித்த வீடியோ, புகைப்படங்கள் சமூகவலைத்தளங்களில் தற்போது வைரலாகி வருகிறது. போலீசாரின் இந்த அணுகுமுறைக்கு பல்வேறு காங்கிரஸ் கட்சியில் எதிர்ப்பு தெரிவித்து சமூகவலைத்தளங்களில் கண்டனங்களை தெரிவித்து வருகின்றனர்.



