20 வருஷ குடும்ப வாழ்க்கை; மனைவியை விவாகரத்து செய்த காங்., இளம் தலைவர் சச்சின் பைலட்!
சச்சின் பைலட் தனது வேட்பு மனுவில் மனைவியை விவாகரத்து செய்துள்ளதாக குறிப்பிட்டுள்ளார்.
சச்சின் பைலட்
ராஜஸ்தானில் அசோக் கெலாட் தலைமையிலான காங்கிரஸ் கட்சி ஆட்சியில் உள்ளது. வரும் 25ஆம் தேதி அங்குள்ள 200 தொகுதிகளுக்கும் வாக்குப்பதிவு நடைபெறும் நிலையில், டிச. 3ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெறுகிறது.
அந்த வகையில், காங்கிரஸ் இளம் தலைவரும் மாநிலத்தின் முன்னாள் துணை முதல்வருமான சச்சின் பைலட் டோங்க் சட்டசபை தொகுதியில் மீண்டும் போட்டியிடுகிறார். கடந்த முறை 54,000 வாக்குகள் வித்தியாசத்தில் பாஜகவின் யூனுஸ் கானை தோற்கடித்தார்.
விவாகரத்து
இந்நிலையில், அவர் வேட்புமனு தாக்கல் செய்துள்ளார். 2004ஆம் ஆண்டில் சாரா அப்துல்லா என்பவரைத் திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு 2 மகன்கள் உள்ளனர். கடந்த 20 ஆண்டுகளாக ஒன்றாக வாழ்ந்து வந்தனர்.
தற்போது, பிரமாணப் பத்திரத்தில், மனைவி குறித்த தகவல்கள் இருந்த இடத்தில் விவாகரத்து பெற்றவர் என்று குறிப்பிட்டுள்ளார்.
மேலும், மகன்கள் இருவரும் தன்னுடன் இருப்பதாகவும் தெரிவித்துள்ளார். அவரது மொத்த சொத்து மதிப்பு சுமார் 3.8 கோடி ரூபாயாக இருந்த நிலையில், 2023ல் 7.5 கோடி ரூபாய் மதிப்பாக உயர்ந்துள்ளது.