கருத்துக்கணிப்பு அல்ல.. மோடியின் கற்பனை கணிப்பு - ராகுல் காந்தி விமர்சனம்!
தேர்தலுக்கு பிந்தைய கருத்துக்கணிப்பு முடிவுகள் குறித்து ராகுல் காந்தி பேசியுள்ளார்.
மக்களவை தேர்தல்
2024 மக்களவை தேர்தல் நாடு முழுவதும் 7 கட்டங்களாக நடைபெற்று முடிந்துள்ளது. மொத்தம் 543 தொகுதிகளில் கடந்த ஏப்ரல் 19, 26, மே 7, 13, 20, 25, ஜூன் 1 ஆகிய தேதிகளில் தேர்தல் நடந்து முடிந்துள்ளது. இவற்றில் குஜராத்தின் சூரத் தொகுதியில் மட்டும் பாஜக வேட்பாளர் முகேஷ் தலால் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
இந்த தேர்தலில் பதிவான வாக்குகள் வரும் ஜூன் 4-ம் தேதி எண்ணப்படுகின்றன. இதனிடையே நேற்று தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக்கணிப்பு முடிவுகள் வெளியானது. அதில் பாஜகவே மீண்டும் ஆட்சியைப் பிடிக்கும் என தகவல்கள் வெளியாகின.
மோடியின் ஊடகங்கள்
இந்நிலையில் காங்கிரஸ் கட்சியின் தலைமை அலுவலகத்தில் காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜூன கார்கே, ராகுல் காந்தி ஆகியோர் காங்கிரஸ் தலைவர்களுடன் இன்று ஆலோசனை நடத்தினார்கள்.
இதனையடுத்து செய்தியாளர்களை சந்தித்த ராகுல் காந்தி தேர்தலுக்கு பிந்தைய கருத்துக்கணிப்பு முடிவுகள் குறித்து பேசினார். அவர் கூறியதாவது "இது மோடியின் ஊடகங்கள் வெளியிட்ட கருத்துக்கணிப்பு.
இது மோடியின் கற்பனை கணிப்பு" என்றார். மேலும் இந்தியா கூட்டணி எத்தனை இடங்களில் வெற்றி பெறும் என்பது குறித்து பேசிய அவர் "பாடகர் சித்து மூஸ் வாலாவின் '295' பாடலை மேற்கோள் காட்டி "295 இடங்களில் இந்தியா கூட்டணி வெற்றி பெறும்" என்று தெரிவித்துள்ளார்.