சமோசாக்குள் கிடந்த ஆணுறை, குட்கா, கல் - ஆர்டர் செய்த நிறுவனத்துக்கு காத்திருந்த அதிர்ச்சி!
ஆட்டோமொபைல் நிறுவனம் ஒன்று ஆர்டர் செய்த சமோசாக்களில் ஆணுறை, குட்கா மற்றும் கற்கள் இருந்தது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
சமோசா ஆர்டர்
மகாராஷ்டிர மாநிலம், புனே மாநகரத்தில் கேட்டலிஸ்ட் சர்வீஸ் சொல்யூஷன்ஸ் பிரைவேட் லிமிடெட் என்ற ஆட்டோமொபைல் நிறுவனம் அமைந்துள்ளது. அங்கு வழக்கம் போல் சாப்பாடு ஆர்டர் செய்துள்ளனர். அப்போது வழங்கப்பட்ட சமோசாக்களில் ஆணுறைகள், குட்கா மற்றும் சிறு கற்கள் இருந்ததை பார்த்து அதிர்ச்சி அடைந்தனர்.
இது தொடர்பாக போலீசார் 5 பேரை கைது செய்து விசாரித்து வருகின்றனர். அந்த விசாரணையில், பெரிய நிறுவனங்களில் ஒன்றான அந்த ஆட்டோமொபைல் நிறுவனத்துக்கு சிற்றுண்டி வழங்க ஒப்பந்தத்தில் ஒரு உணவு நிறுவனம் தேர்வானது. அதற்கு எதிராக, ஒப்பந்தத்தை கைப்பற்றும் வாய்ப்பை இழந்த போட்டி நிறுவனம் சதி திட்டம் தீட்டியது.
காத்திருந்த அதிர்ச்சி
போட்டி மற்றும் பொறாமை காரணமாக தனது ஊழியர்களில் சிலரை உணவு நிறுவனத்துக்கு ஒப்பந்த ஊழியராக அனுப்பி வைத்தது. அந்த நபர்கள், ஆட்டோமொபைல் நிறுவனத்துக்காக தயாரான சமோசாக்களில் ஆணுறை, குட்கா மற்றும் சிறு கற்களை கலந்தனர் என்று தெரியவந்துள்ளது.
இதில், சம்மந்தப்பட்ட ரஹீம் ஷேக், அசார் ஷேக், மசார் ஷேக், ஃபிரோஸ் ஷேக் மற்றும் விக்கி ஷேக் என 5 பேர் கைது ஆகியுள்ளார். இந்த குற்றம் சாட்டப்பட்ட 5 பேரில் 3 நபர்கள் பணியாளர்களை போல் ஊடுருவி கலப்படத்தில் ஈடுபட்டதும், இதர 2 பேர் அதற்காக வரவழைத்தவர்கள் என்று சொல்லப்படுகிறது.
மனோகர் என்டர்பிரைசஸ் என்ற ஒப்பந்த நிறுவனத்தின் நற்பெயரை கெடுக்க எஸ்ஆர்ஏ என்டர்பிரைசஸ் என்ற போட்டி நிறுவனம் திட்டமிட்டதும், அதற்காக தனது விசுவாச ஊழியர்களை கலப்படம் செய்ய அனுப்பிய உண்மை வெளிவந்துள்ளது.