வேலை தராமல் 20 ஆண்டுகள் சம்பளம் கொடுத்த நிறுவனம் - வழக்கு தொடர்ந்த பெண்!
வேலை தராமல் 20 ஆண்டுகளாக சம்பளம் கொடுத்த நிறுவனத்துக்கு எதிராக ஊழியர் ஒருவர் வழக்கு தொடர்ந்துள்ளார்.
நிறுவனம்
பிரான்ஸ் நாட்டை சேர்ந்த லாரன்ஸ் வான் என்ற பெண் கடந்த 1993-ம் ஆண்டு டெலிகாம் நிறுவனத்தில் பணிக்கு சேர்ந்தார். இவர் பகுதி பக்கவாதம் மற்றும் வலிப்பு நோயால் பாதிக்கப்பட்டிருந்தார்.
இதனால் தொடக்கத்தில் அவருக்கு ஏற்ற பணி வழங்கப்பட்டது. இதனையடுத்து கடந்த 2002-ம் ஆண்டு வரை அந்த நிறுவனத்தில் அவர் வேலை செய்தார். பின்னர் அதே ஆண்டில் வேறுபகுதிக்கு லாரன்ஸ் வான் பணியிட மாற்றம் பெற்று சென்றார். ஆனால், அங்கு அவருக்கு ஏற்ற வேலையை நிறுவனம் வழங்கவில்லை.
மேலும், தொடர்ந்து பல வருடங்களாக முழு சம்பளத்தையும் கொடுத்து வந்துள்ளனர். இதனிடையே அந்த நிறுவனம் ஆரஞ்ச் என பெயர் மாற்றம் செய்யப்பட்டது. ஆனால், லாரன்ஸ் வானுக்கு எந்த பணியையும் வழங்கவில்லை.
ஊழியர் வழக்கு
இந்நிலையில் இது தொடர்பாக நீதிமன்றத்தில் மனு ஒன்றை அவர் தாக்கல் செய்துள்ளார். அதில், "தனக்கு வேலை கொடுக்காமல் கடந்த 20 ஆண்டுகளாக முழு சம்பளத்தையும் ஆரஞ்ச் நிறுவனம் வழங்கியுள்ளது.
இதன்மூலம் தனக்கு தார்மீக துன்புறுத்தலை நிறுவனம் தருகிறது. இதனால் தொழில்முறை அனுபவத்தை தான் இழக்க நேரிடும்" என்று மனுவில் குறிப்பிட்டுள்ளார். இந்த குற்றச்சாட்டை மறுத்த ஆரஞ்ச் நிறுவனம் "லாரன்ஸ் வானின் உடல் நிலையை கருத்தில் கொண்டு அவருக்கு ஏற்ற பணிச் சூழலை உருவாக்குவது குறித்து நாங்கள் பரிசீலித்தோம்.
ஆனாலும், இந்த செயல் முறையை அவருடைய மருத்துவ விடுப்பு கடினமாக்கிவிட்டது" என்று தெரிவித்துள்ளது. வேலை தராமல் 20 ஆண்டுகளாக சம்பளம் கொடுக்கும் நிறுவனத்துக்கு எதிராக பெண் வழக்கு தொடர்ந்திருப்பது பலரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது. மேலும் சிலர், மனசாட்சி உறுத்தியதால் அவர் இப்படி செய்திருக்கலாம் என்று கருத்து தெரிவித்து வருகின்றனர்.